ஆள்கடத்தல் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது ஆள்கடத்தல் வழக்கு தொடரப்பட்டது.
நிலப்பிரச்சனை தொடர்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர் விழி, மகன் சிவபாலன் ஆகியோரை அமைச்சர் ராஜா கடத்தியதாக சுப்பிரமணி என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இதில், சிவபாலன் என்பவர், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், அமைச்சரின் ஆதரவில் தான் இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து என்.கே.கே.ராஜாவின் அமைச்சர் பதவியை முதலமைச்சர் கருணாநிதி பறித்தார்.
இந்தநிலையில் சுப்பிரமணி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இன்றளவும் சிவபாலன் அமைச்சரின் பிடியில்தான் இருப்பதாகவும், அவர் சுதந்திரமாக நடமாட முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தர்மாராவ், தமிழ்வாணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி), பெருந்துறை காவல்துறை ஆய்வாளர், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.