தமிழகத்தில் நாளையும் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு நேற்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிட்டது. இன்று கோவை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்தது.
சென்னையில் இன்று காலை முதலே பலத்த மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அடுத்த 36 மணி நேரத்துக்கு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களில் நிலைமைக்கு தகுந்தவாறு மாவட்ட ஆட்சியத் தலைவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.