Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துரோக‌த் த‌மிழ‌ன்: கருணாநிதி வேதனை!

துரோக‌த் த‌மிழ‌ன்: கருணாநிதி வேதனை!
, புதன், 22 அக்டோபர் 2008 (13:20 IST)
"தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா'' என்ற பாடலை மறந்து விட்டு; அல்லது மாற்றிப்பாட முனைந்து "தமிழன் என்று சொல்லடா; தழை இலைகளை மெல்லடா'' என்றல்லவா பாடிட விரும்புகிறான் துரோகத் தமிழன்! எ‌ன்று இல‌ங்கை‌த் த‌மிழ‌‌ர்க‌‌ள் கா‌‌ப்பா‌ற்ற‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று குர‌‌ல் கொடு‌க்‌கி‌ன்றவ‌ர்களு‌க்கு எ‌திராக பேசுப‌வ‌ர்களை ப‌ற்‌றி முத‌ல்வ‌ர் இ‌வ்வாறு கரு‌த்து‌ம், வேதனையு‌ம் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக தொண்டர்களுக்கு அவ‌ர் இ‌ன்று எழுதியுள்ள கடித‌‌ம்: இலங்கைத் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீர் வடிக்கவும், மெல்ல உதடசைத்து ஆறுதல் கூறவும் வழியற்றுப்போய் விழியற்ற குருடர்களாய் இங்குள்ள தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது.

எழுபது ஆண்டுக்காலமாக இலங்கை வாழ் ஈழத் தமிழர்கள், உரிமையற்றவர்களாக, உடைமைகளைப் பறிகொடுப்பவர்களாக, ஏன்; உயிரையும் கூட அர்ப்பணிப்பவர்களாக; இன்னும் சொல்லப்போனால் கற்பெனும்மான உணர்வையும் கொள்ளை கொடுப்பவர்களாக; கணவன் முன்னிலையில் அவன் கட்டிய மனைவி - கற்பிழந்தாள் - அண்ணனோ தம்பியோ கண்ணெதிரே பார்த்துக் கொண்டு அலற அலற; அவர்களின் அருமைச் சகோதரி; அக்காளோ, தங்கையோ அம்மாவோ; அதனினும் கொடுமையாக முதிர்ந்த வயதுத் தாய்க்குலமும் சிங்கள முள்ளம்பன்றிகளின் முரட்டுப் பற்களுக்கிடையே சிக்கி ரத்தம் சிந்தும் கோரம்! கோரம்!

தன்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாமல்; தவழும் தளிர்கள்; தாங்கள் நகர்ந்திடும் தாழ் வாரத்திலேயே; மரணம் வெடிகுண்டு வடிவத்திலே வெடித்துச் சிதறி அந்தச் சிசுக்களின் உயிரைச் சூறையாடப் போகிறது என்பதை; நினைத்து அதிர்ந்திடுவதற்கும் நேரமின்றித் தமது ஆவி பறிகொடுக்கும் அன்னையர்கள்!

இதுதான் இன்றைய இலங்கை -இலங்கையின் நகரங்கள் -கிராமங்கள் - ஏழையர் காலனிகள் -ஏன் செல்வச் சீமான்களின் தோட்டம் துரவுகளில் கூட -அய்யோ என்ற ஓலம் -குய்யோ முறையோ எனும் கூச்சல் -இதனை இருபது கல்தொலைவுக்கு அப்பால் இங்குள்ள தமிழன் அலைமோதும் கடலோரம் நின்று காதால் கேட்கவும் -கண்ணால் பார்க்கவும் -ஒரு பயங்கரமான நிலைமை.

மேட்டில் விளையாடிய குழந்தை; நூறு அடி ஆழக்குழியில் -இரு நூறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் - தவறி விழுந்து விட்டதென்றால் - அதைப்பார்ப்பவர்களுக்கு பரிதாப உணர்ச்சி மட்டும் பறந்தோடி வந்தால் போதுமா? -அவர்கள் எத்துணை அதிர்ச்சி கொண்டு இயந்திரங்களை பயன்படுத்தி அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வரத்துடியாய்த் துடிக்கிறார்கள் -உரக்கிணற்றில் ஒரு குழந்தை விழுந்த செய்தி உலகத்தார் அனுதாபத்தையே பெற்று விடும்போது; பழந்தமிழன் வாழ்ந்த பகுதி -ஆண்ட பகுதி -நமது கரிகாலனும், ராஜராஜனும், ராஜேந்திரச்சோழனும் கடல் கடந்தும் களம் கண்டு போரிட்டு; கடாரத்தில் ஏற்றினார்களே புலிக்கொடி; அது தமிழர் புவியாண்ட கொடி அல்லவா!

அந்தக் கொடி நிழலில் வாழ்ந்தோர் -ஆண்டோர் -இன்று இலங்கையிலே தாழ்ந்தோர் -மாண்டோர் என்ற கணக்கில் அல்லவா வருகின்றனர்! அந்தோ தமிழர்களே; உங்களுக்காக குரல் கொடுக்கவும் முடியாமல்; இங்குள்ள தமிழன் குறுக்கே நிற்கின்றானே!

அங்கே போர் நின்று விடுமோ? அமைதி திரும்பி விடுமோ? கள்ளிக்காடு சூழ அவதியுறும் இலங்கைத் தமிழன் ஆறுதல் பெற அங்கே முல்லைப் பூ பூத்து விடுமோ; என்று முட்டிக்கொண்டு அழவும் முடியாமல் - மோதிக்கொண்டு கதறவும் முடியாமல் -அய்யோ! இலங்கைத் தமிழ் இனம் காப்பாற்றப்பட்டு விடும் போலிருக்கிறதே என்று; "தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா'' என்ற பாடலை மறந்து விட்டு; அல்லது மாற்றிப்பாட முனைந்து "தமிழன் என்று சொல்லடா; தழை இலைகளை மெல்லடா'' என்றல்லவா பாடிட விரும்புகிறான் துரோகத் தமிழன்!

அவனுக்கு மாறாக; அந்தச்சிறு அடங்காப் பிடாரி கூட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகின்ற முறையிலே; அலைமோதும் கடலென ஆர்ப்பரிக்கும் தமிழர் கூட்டம்; கடந்த 21ஆம் நாள் மழை பொழிந்தாலும் கவலையில்லை; எங்கள் தமிழரை இலங்கையில் காத்திட இங்குள்ளோர் அணி திரள்வோம் என்று ஆடவர், பெண்டிர், மாணவர், தொழிலாளர் அனைவரும் ஒன்று திரண்டனரே; இருந்தாலும் மழை காரணமாக இரண்டு நாள் ஒத்தி வைத்து "மனிதச் சங்கிலி'' - 24ஆம் நாள் பிற்பகல் என்று அறிவித்ததால்; - மேலும் நாலு மடங்கு மக்களன்றோ தமிழ் முரசொலித்து வர இருக்கின்றார்கள் - வரிசை வகுத்திட இருக்கின்றார்கள்!

"பார் சிறுத்தலால் படை பெருத்ததோ - படை பெருத்தலால் பார் சிறுத்ததோ'' என்ற கலிங்கத்துப் பரணி பாடலை நினைவூட்ட நிரம்பி வழியப்போகும் கூட்டம்!

என் அழைப்புக்கே எள் போட்டால் அந்த எள் விழ இடமின்றி வந்து நிறைகின்ற உடன்பிறப்புக்காள்!

எல்லாக் கட்சித் தலைவர்களும் தமிழ் உணர்வு ததும்பிட அழைக்கும்போது- மழை

ஏழு கடல் ஒன்றானது போன்ற தோற்றத்தையல்லவா; தமிழர்தம் ஏற்றத்தையல்லவா; உணர்வுள்ள உலகத் தமிழர் அனைவரும் காண இருக்கிறார்கள்.

அக்டோபர் 24 - பிற்பகல் 3 மணி! அலைகடலாய் சங்கமிப்போம் - தன்மானத் தமிழரின் மலைமுகடு இதுவென நிலைநாட்டுவோம்! இந்த அறப்போர் சங்கிலி பற்றி அவதூறு கிளப்புவோர் - அறிக்கை விடுவோர் - சிங்கள வெறியர்களிடமிருந்து தமிழ் இன மக்களைக் காத்திடும் இந்த முயற்சியைக் காயப்படுத்த முனைவோர் - களங்கப்படுத்த நினைப்போர் - திசை திருப்புவோர் - அக்காள் தங்கைகளுடன் பிறந்தவர்களாக இருக்க முடியாது - அன்னையர் குலத்துக்கொரு அவமானமெனிலோ; ஆனந்தக் கூத்தாடுபவர்களாயிருக்க வேண்டும் அவ்வளவு ஏன்? அவர்கள் தமிழரல்லாதவர்களாயிருக்க வேண்டும் - என்கிற இந்த முடிவோடு ஒரு வேளை மழை தொடர்ந்து - அதில் நனைய நேரிட்டாலும் நினைவு எல்லாம் என் தமிழ் இனத்தைக் காப்பதில்தான் நிலைத்திருக்கும் என்ற சூளுரையுடன் சென்னைத் தலை நகரில் - வங்கக் கடலெனப் பெருகிடுக! சங்கம் முழங்கிடுக!! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்று!!!

இவ்வாறு முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூறி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil