''
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று கூறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை'' என்று அக்கட்சி மாநிலச் செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதன் மாநில செயலர் என்.வரதராஜன் இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "இன்று தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகளும், இதர சில அமைப்புகளும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று நிலை எடுத்திருப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
''இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் ஆயுத மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது' என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அண்மையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தும் முகமாக நாளை நடைபெறும் மனிதச்சங்கிலியில் கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இரண்டு வார காலத்திற்குள் மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தின் தீர்மானங்களை செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய நேரிடும் என்று தீர்மானம் முன்மொழியப்பட்டபோது அந்த கூட்டத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் ஒவ்வொரு கட்சியும் சுயேச்சையாக முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை இது என்று தெளிவுபடுத்தியதையும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.