ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரது பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தலைவர் கே.வி.தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை போரில் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களை காப்பாற்ற தமிழக அரசும், மத்திய அரசும், காங்கிரஸ் தலைவர்களும் பல்வேறு முனைகளில் தங்களது கடமைகளை செய்து வருகின்றனர்.
அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு தேடும் இந்த நல்ல நேரத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை ஆதரித்தும், பாராட்டு தெரிவித்தும் பல்வேறு நிலைகள் எடுப்பவர்களை சமூகம் அங்கீகரிக்காது.
ராஜீவ் காந்தி இழப்பிற்கு காரணமானவர்களின் துதிபாடிகளை கண்டிப்பது என்னுடைய கடமையாகும். இந்திய மண்ணில் இது போன்ற வன்செயல் ஆதரவாளர்களுக்கு இடம் அளிப்பதை ஆதரிக்க முடியாது.
நேற்று ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினரால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், அமீர் போன்றவர்கள் முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி படுகொலையை கொச்சைப்படுத்தியும் நியாயம் கற்பித்தும் பேசியதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய நிலைப்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டிய வேண்டியது ஒவ்வொரு தமிழின உணர்வாளர்களின் கடமையாகும்'' என்று கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.