இலங்கையில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக திரையுலகத்தினரும் தங்களது ஆதரவை தெரிவித்து 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை படப்பிடிப்பை ரத்து செய்துள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆதரவாக அவர்கள் இன்று ராமேஸ்வரத்தில் பேரணி நடத்தினர்.
இதற்காக இன்று ராமேஸ்ரத்தில் குவிந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையுலகத்தினர் ராமேஸ்வரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு திரண்டனர். அங்கிருந்து இயக்குனர் பாரதிராஜா தலைமையில் கீழக்காடு கிராமம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலத்தில் பங்கேற்ற கலைஞர்கள் இலங்கை அரசைக் கண்டித்து எழுதப்பட்ட வாசகங்களை ஏந்தியபடி சென்றனர். அப்போது இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து கீழக்காடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்ட மைதானத்துக்கு அவர்கள் வந்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா, ராம. நாராயணன் உள்பட திரையுலக கலைஞர்கள் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்துப் பேச இருக்கின்றனர்.