வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே பகுதியில் நீடிப்பதால் தொடர்ந்து தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழையோ அல்லது பலத்த மழையோ பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சாத்தூர் அருகே மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.