விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தூர் தாலுகா ஆர்.சி. வடக்கு தெருவில் உள்ள ஆரோக்கியராஜ் என்பவரது வீட்டு சுவர் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
இதில் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த பாரதி, டெய்சிராணி, அனுசுயா, மாரியம்மாள் என்ற 4 பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினரும், மீட்பு குழுவினரும் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களையும் மீட்டனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.