தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா வங்க கடல் பகுதியில் புதிதாக குறைந்தழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதனிடையே அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழகம் ஆன ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை மிதமானது முதல் அதிக மழை பெய்யும் என்றும், தமிழகத்தில் பிற உட்புற பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். காலையில் 9.30 மணிக்கு மேல் மழை பெய்ததால் மாணவ- மாணவிகள் மழையில் இருந்து தப்பித்துக் கொண்டனர். ஆனால் அலுவலகத்திற்கு செல்வோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.
சென்னையில் தாழ்வான பகுதிகளான மடிப்பாக்கம், வேளச்சேரி, வில்லிவாக்கம் உள்பட பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது.
தமிழகத்தில் நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 13 செ.மீ. மழையும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், நீலகிரி மாவட்டம் கிட்டி ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 6 செ.மீ மழையும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 5 செ.மீ மழையும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், நீலகிரி மாவட்டம் குந்தா ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, மதுரை மாவட்டம் மேலூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, பொன்னேரி, செம்பரம்பாக்கம், ராமநாபுரம் மாவட்டம் காரைக்கால், தொண்டி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பிரெட்டி பாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம் பரூர், சேலம் மாவட்டம் ஓமலூர், கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூர், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், நீலகிரி மாவட்டம் தேவாலா, கரூர் மாவட்டம் உதகமண்டலம், மாயனூர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, உத்திரமேரூர், தாம்பரம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றம், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், செங்கோட்டை, வேலூர் மாவட்டம் ஆம்பூர், சோழிங்கர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஓசூர், சோழகிரி, உத்தங்கரை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சேலம் மாவட்டம் வாழப்பாடி, கோயம்முத்தூர் மாவட்டம் அவிநாசி, சூலூர், ஈரோடு மாவட்டம் பவானி, தாராபுரம், பெருந்துறை, குன்னூர், திருச்சி மாவட்டம் முசிறி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், கரூர் மாவட்டம் கடவூர், விருதுநகர், மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திண்டுக்கல் மாவட்டம் சத்திராப்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.