Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கக் கூட்டமென சென்னைக்கு வாரீர் : கருணாநிதி அழை‌ப்பு!

சிங்கக் கூட்டமென சென்னைக்கு வாரீர் : கருணாநிதி அழை‌ப்பு!
, வெள்ளி, 17 அக்டோபர் 2008 (15:34 IST)
webdunia photoFILE
''இலங்கையில் அமைதியை நிலைநாட்அ‌‌க்டோ‌ர் 21ஆ‌மதே‌தி நடைபெறு‌மம‌னித‌சச‌ங்‌கி‌லி அ‌ணிவகு‌ப்பு‌க்கதமிழச் சிங்கக் கூட்டமென தலைநகர் சென்னை நோக்கி வருக! தமிழர் நாம் என நெஞ்சுயர்த்தியவாறு வந்திடுக சென்னைக்கு!'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கடிதத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும், நிலையான அமைதி இலங்கையில் உருவாகிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், இனப்படுகொலையும், போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன் வரவேண்டுமென்று கேட்டுக்கொள்வதற்காக தமிழக அரசின் சார்பில் அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று 14-10-2008 அன்று கூட்டப்பட்டு, அதற்கான அழைப்புக் கடிதங்களை ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கும் நானே கையெழுத்திட்டு அனுப்பினேன்.

கடிதங்கள் அனுப்பப்பட்ட செய்தி ஏடுகளிலும் வெளி வந்தது. அதிலே நான்கு கட்சிகள் மட்டும் அரசு சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகச் செய்தி அறிவித்தார்கள். அவர்களைத்தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கூட்டத்திற்கு வருகை தந்து, இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையோடு தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். அவர்களுக்கெல்லாம் அந்தக் கூட்டத்திலேயே நன்றி தெரிவித்துக் கொண்டேன். இப்போதும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக அரசின் சார்பாக நான் அழைப்பு விடுத்து கூட்டிய அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தையே கண்துடைப்பு நாடகம் என்று ஜெயலலிதா புறக்கணிப்பு செய்தார். அரசு கூட்டியுள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்த அடுத்தகணமே ம.தி.மு.க. தலைவர் வைகோவும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். விஜயகாந்தும் வரவில்லை.

ஜெயலலிதா புறக்கணித்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் நடைபெறுகின்ற தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டு வாரக் காலத்திற்குள் அதாவது அக்டோபர் 28ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பார்த்தால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றும், இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப்புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு இரங்கற்பா தெரிவிக்கும் கருணாநிதி என்றும், என்னைக் கேலி செய்தும், கண்டித்தும், ஜெயலலிதா காரசாரமாக அறிக்கை விடுத்தார்.

வை‌கோவா‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌விய‌ப்பு!

இதனைப்பற்றி; காலமெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்தவரும், எனக்குக் கடிதம் எழுதி அனுப்பி விட்டு, பல்வேறு ஆபத்துகளைக் கடந்து வவுனியா காடு வரையிலே சென்று திரும்பியவருமான வைகோ கடுகளவு மறுப்போ அல்லது அதுபற்றி கருத்தோ இன்றுவரை தெரிவிக்கவில்லை என்பதுதான் எனக்கு ஏற்பட்ட வியப்பு!

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் ஜெயலலிதாவை கண்டித்தும், மறுத்தும் உண்மையை உலகத்திற்கு உணர்த்திடும் அளவிற்கு வெளியிட்ட அறிக்கைதான் இங்குள்ள தமிழர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை "பொழுது போக்கும் கூட்டம்'' என்றும், "கபட நாடகம்'' என்றும், "மோசடி நாடகம்'' என்றும் அர்ச்சனை செய்யவும் ஜெயலலிதா தயங்கவில்லை.

அவரும் வேறு சிலரும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததையே தாங்கிக் கொள்ள முடியாமல், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி.விஜயராஜேந்தர் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தன் உடலிலே ஓடுகின்ற தமிழ் ரத்தம் கொதிப்பேறி ஆவேசமாக கண்டனக் குரல் எழுப்பினார்.

அப்போது கூட நான் அவரை அமைதிப்படுத்தி இது போன்ற நேரத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றும், இந்தக் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்து அறிக்கை விட்டவர்கள் இலங்கையிலே படுகொலைக்கு ஆளாகின்ற அந்த தமிழர்களை மதிக்காதவர்கள் என்றோ, அவர்களை ஏற்காதவர்கள் என்றோ எண்ணி விடக் கூடாது; அவர்களுக்கு என்னைப்பிடிக்காத காரணத்தால்தான் என் அழைப்பையேற்றுக் கொள்ளவில்லை என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

எனவே இதை மறந்து விட்டு எல்லோரும் ஒற்றுமையாகக் குரலெழுப்பி இலங்கைத் தமிழர்களுக்காக, அந்தப் பூமியில் நிலையான அமைதி தோன்றுவதற்காகப் பாடுபடுவோம் என்றுதான் வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் வெளிவந்த பிறகு கூட, நம் மீது பொழிகின்ற அர்ச்சனைகளை நிறுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கட்சிக்காரர்களே முகம் சுளிக்கின்ற அளவிற்கு, முணுமுணுக்கின்ற அளவிற்கு இலங்கைத் தமிழர்களைப் பற்றி தனக்குத்தான் கவலை என்பதைப் போல வரலாறு தாங்காத வடிகட்டிய பொய்களை அறிக்கைகளாக வடித்தெடுத்து இங்குள்ள ஏடுகளுக்குப் பக்கம் பக்கமாக வழங்கி வருகிறார்.

ஏடுகள் நடத்துவோரில் சிலர் "தமிழ் இன உணர்வு'' என்ன விலையென்று கேட்பவர்களாக இருப்பதால் அந்த அறிக்கைகளை தலை வாழை இலையிலே ஊற்றப்பட்ட சுவையான பால் பாயாசமாக எண்ணி அருந்தி மகிழ்கிறார்கள்.

என் செய்வது? இலங்கைத் தமிழ் மக்களின் விமோசனத்திற்காக தமிழ் நிலத்தில் எப்பொழுது இன உணர்வு எழுந்தாலும் அந்த உணர்வு உருவாகும் பொழுதே, அதைக் கெடுப்பதற்கு உலைவைப்போர் சிலர் உருவாகி விடுகிறார்களே; அந்த வரிசையில் வாள் சுழற்றி நம்மோடு வம்புக்கு வருகின்ற ஜெயலலிதாவை இங்குள்ள தமிழர்கள் அல்லவா அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

இன்று நேற்றல்ல; இவர் ஆட்சியிலும் சரி, நம் ஆட்சியிலும் சரி, ஈழத் தமிழ் அகதிகள் குடும்பங்கள் எப்படி நடத்தப்பட்டன என்பதற்கு ஓர் உதாரணம்;

1989-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி நடைபெற்றபோது ஈழத் தமிழ் அகதிகள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உயர் கல்வி பயில வேண்டுமென்பதற்காக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் 20 இடங்களையும், பொறியியல் கல்லூரியில் 40 இடங்களையும், வேளாண்மைக் கல்லூரியில் 10 இடங்களையும், பாலி டெக்னிக்குகளில் 40 இடங்களையும் ஒதுக்கீடு செய்தது.

ஆனால் 1991ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், இந்த இட ஒதுக்கீட்டையெல்லாம் அ.தி.மு.க. அரசு தடை செய்து ஆணையிட்டது. மீண்டும் 1996-இல் ‌தி.மு.க. ஆட்சி வந்த பிறகு அந்த வசதிகள் மீண்டும் வழங்கப்பட்டன. இதையெல்லாம் தமிழ்நாட்டினர் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

"தமிழ் இனத் தலைவர்'' என்று எனக்கு நானே பட்டம் வழங்கிக் கொண்டதாக ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். தன்னுடைய பிறந்த நாளுக்காக ஆண்டு தோறும் சிறைக் கைதிகளை விடுவித்தவர் அல்லவா? அவர் அப்படித்தான் சொல்லுவார்.

அவர் முதல்வராக இருந்தபோது திரைப்பட நகரத்திற்கு கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். பெயரை வைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், அதனைக் கேட்காமல் தன் பெயரையே சூட்டிக் கொண்டவர் அல்லவா? அவர் அப்படித்தான் சொல்லுவார்.

தன்னலமற்ற தயாபரி ஜெயல‌லிதா!

அரசு போக்குவரத்துக் கழகம் ஒன்றுக்கு "ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்'' என்று பெயர் சூட்டிக் கொண்ட தன்னலமற்ற தயாபரி அல்லவா? அவர் அப்படித்தான் சொல்லுவார்.

அறிக்கைக்கு அறிக்கை, பேச்சுக்கு பேச்சு, சவாலுக்கு சவால் என்று போனால், அவற்றை அம்மையார் எப்படி அணுகுவார் என்பது நமக்குத் தெரியும் என்பதால் அவரிடம் அனுதாபம் காட்டிவிட்டு, இப்போது நாம் அனைத்துக்கட்சிக் கூட்டத்திலே நிறைவேற்றப்பட்ட ஆறு தீர்மானங்கள்-ஆம், இலங்கைத் தமிழர்களுக்கு ஆறுதல் தரும் தீர்மானங்களாக, நிறைவேற்றப்பட்டிருக்கிறதே; அவற்றை நடைமுறைப்படுத்த என்ன வழி, இன்னும் எப்படியெல்லாம் அந்தக் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய அரசின் கவனத்தை இதயப்பூர்வமாக நம் மீது திருப்புவதற்கு என்ன வழிமுறைகள் என்பதையெல்லாம் சிந்திக்கவும், அவற்றைச் செயல்படுத்த வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.

அந்தச் சிந்தனையில் எழுந்ததுதான் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டு, சென்னையில் வரும் 21ஆம் தேதி நாம் நடத்தவுள்ள "மனிதச் சங்கிலி அணிவகுப்பு'' ஆகும்.

நான் உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்கள் மாத்திரமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா அமைப்புகளின் தலைவர்களும் தங்கள் பங்களிப்பினை இதற்கு வழங்கிட வேண்டும். நமது வேண்டுகோள் அனைத்தும் அனைத்துக்கட்சிக் கூட்டத் தீர்மானங்களாக ஏடுகளில் வெளிவந்துள்ளன. அவற்றை மத்திய அரசுக்கும் குறிப்பாக பிரதமருக்கும் சிறப்பாக சோனியா காந்தி அம்மையாருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

பிரதமர் இத்திங்கள் 6ஆம் தேதியன்று மயிலை மாங்கொல்லை கூட்டம் நடைபெற்ற அன்றே, காலை 11 மணியளவில் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு என்னிடம் பேசியதோடு, நான் அப்போது அவரிடம் விடுத்த நான்கு கோரிக்கைகளையும் அலட்சியப்படுத்தாமல், அன்றைய தினம் மாலையிலேயே இலங்கைத் தூதுவரை அழைத்து பேசும்படி ஆணை பிறப்பித்து, அவ்வாறே பேசப்பட்ட அதிகாரபூர்வமான செய்தியும் அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது.

இந்தியப் பேரரசு இங்குள்ள தமிழ் இனத்தவரின் வேண்டுகோளை அலட்சியப்படுத்தவில்லை என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்ட காரணத்தால், அந்த நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு மேலும் பல வெற்றி வாய்ப்புகள் தழைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் 14ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் அவதியுறும் தமிழ்க் குடும்பங்களைக் காப்பாற்ற நித்த நித்தம் படுகொலைக்கு ஆளாகும் நமது இன மக்களைப் பாதுகாக்க, பசியால் துடிக்கும் பச்சிளம் குழந்தைகள் ஈழத்தில் தங்கள் தாய்களின் முகங்களைப் பார்க்க, அந்தத் தாய்களின் முகங்களோ தமிழகத்தில் உள்ள நம் முகங்களை அன்றோ தேடுகின்றன என்ற உணர்வோடு அவர்கள் வாழ்வில் இனியாவது அமைதி துளிர் விடச் செய்ய ஆயத்தமாகட்டும் தமிழகம் என்பதை வலியுறுத்தவும்;

ஆதரவுக்கரம் நீட்டட்டும் இந்தியப் பேரரசு என்பதை அறவழியில் நினைவூட்டவும்தான் இங்கே சென்னையில் - செங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற மூச்சு, எங்கள் தமிழ் மூச்சு என்று முசம் கொட்டும் தமிழர் சேனை; தாய்மார்கள் சேனை; இளம் மாணவர்கள் சேனை; இங்குள்ள கலைஞர்களின் சேனை; இடையறாது உழைக்கும் பாட்டாளிகள் சேனை எல்லா சேனைகளிலும் ஓரிருவர் கூட ஓய்வு கொள்ளாது அனைவரும் கலந்து கொள்வோம் அந்த அணிவகுப்பில்!

ஈழத் தமிழரைக் காப்போம் என்ற சங்கற்பச் சங்கிலி!

மறவாதீர் மனிதச் சங்கிலி - 21ஆம் தேதி - பிற்பகல் 3 மணிக்கு! வட சென்னையில் சிங்காரவேலர் மாளிகையிலிருந்து தொடங்கி- அண்ணா சாலையைக் கடந்து தென் சென்னையைத் தாண்டி -தாம்பரத்தையே தாண்டுமோ என்ற அளவிற்கு தமிழர் அணி வகுக்கும் "சங்கற்பச் சங்கிலி''! ஈழத் தமிழரைக் காப்போம் என்ற சங்கற்பச் சங்கிலி!

அக்டோபர் 14 -அனைத்துக் கட்சிக் கூட்டம் - நமது உணர்வைக் காட்டும் பாசறை. அக்டோபர் 21 - அந்த உணர்வில் தோய்ந்த உறுதி படைத்த நெஞ்சங்களின் அறப்போர் படை வரிசை. மனிதச் சங்கிலி! மனித நேயச் சங்கிலி!

இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவோமஎன முழங்கும் முரசுகளின் வரிசை அது! வாரீர்! வாரீர்! தமிழகம் எங்கணுமிருந்து தடந்தோள் படைத்தோரே! தாய்க்குலமே! கழனியில் உழைப்போரே! கடலில் உழல்வோரே! கலையுலகத்தினரே! கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டமென தலைநகர் சென்னை நோக்கி வருக! தமிழர் நாம் என நெஞ்சுயர்த்தியவாறு வந்திடுக சென்னைக்கு!'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil