சென்னை இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யும் முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ளாவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி முதல் கட்டமாக தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த மேலும் மூன்று பேர் முதலமைச்சர் கருணாநிதியிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ஆம் தேதி அன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இலங்கையில் இனப்படுகொலை கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டு தமிழ் இனம் பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
சிங்கள இராணுவத்தின் தாக்குதலை உடனடியாக நிறுத்திட இந்தியப் பேரரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு நிலையான அமைதி உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"இந்த தீர்மானங்கள் செயல் வடிவம் பெறவும், இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் முயற்சி மேற்கொள்ள இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதை இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது'' என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டம் நடந்த மறுநாள் புதன்கிழமையன்று கனிமொழி, தமது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து 29.10.2008 தேதியிட்ட அக்கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதியிடம் அளித்துள்ளார்.
இதே போல திருச்சி சிவா, அ.அ.ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் தமது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்து 29.10.2008 தேதியிட்ட கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதியிடம் நேரில் அளித்துள்ளனர்'' என்று தி.மு.க. தலைமைச் கழகம் தெரிவித்துள்ளது.