இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 23ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்ததப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத் தமிழினம் அழிவதை தடுக்க வலியுறுத்தி தமிழக மக்களிடையே கடந்த சில வாரங்களாக கொந்தளிப்பு நிலவிவருகிறது. அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பிலும் சிங்கள இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
அந்த வரிசையில் 18ஆம் தேதி திரையுலகத்தினரும் ராமேஸ்வரத்தில் கண்டன அணிவகுப்பு நடத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரையுலகத்தினரின் மனிதநேயம் மற்றும் இனமான உணர்வுகளை விடுதலை சிறுத்தைகள் நெஞ்சார வரவேற்று பாராட்டுகிறது.
ஈழத் தமிழர்களை பாதுகாத்திட இந்திய அரசு உடனடியாக தலையிடும்படி வலியுறுத்தி 21ஆம் தேதி மனித சங்கிலி அறப்போர் சென்னையில் நடைபெறுவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்பர். தமிழர் சங்கிலி போராட்டம் டெல்லியை அசைப்பதாகவும், கொழும்புவை அச்சுறுத்துவதாகவும் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாகவும் அமைய வேண்டும்.
மேலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 23ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் விடுதலை சிறுத்தைகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும். அன்று தமிழகத்தின் எந்த திசையிலும் தொடர் வண்டிகள் ஓடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் அனுமதிக்க மாட்டோம் என்பதை தெரிவித்து அப்போராட்டத்திற்கும் தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.