''
இலங்கைத் தமிழர்களை காக்கும் பிரச்சனையில் அரசியல் வேண்டாம் என்றும், அவர்களை காக்கும் முயற்சியில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்'' என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை இனி சிங்களவர்களுக்கே சொந்தம். தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையை சிங்களவர்களின் நாடு என்பதை ஒப்புக்கொண்டு தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக, அதாவது சிங்களவர்களுக்கு அடிமையாக வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு இங்கே இடமில்லை'' என்று சிங்கள போர்ப்படைத் தளபதி பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். சிங்கள போர்ப்படைத் தளபதியின் இந்த பிரகடனம் ஒட்டுமொத்த தமிழினத்திற்கு விடப்பட்ட சவால் என்பதை உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும்.
இலங்கையில் தமிழினத்தின் உரிமைகளுக்காகவும், தமிழர்களின் தன்மானத்தை காக்கவும் போர்முனையில் போராடி வரும் பிரபாகரன் எங்கள் முன்னால் மண்டியிட வேண்டும் என்றும் சிங்கள வெறிப்பிடித்த அந்த தளபதி முழங்கியிருக்கிறார். இதன் மூலம் பிரபாகரனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினமே சிங்களவர்கள் முன் மண்டியிட வேண்டும் என்றுதான் சொல்கிறார் அந்த போர்ப்படை தளபதி பொன்சேகா. பொன்சேகா அங்கே தளபதியாக நீடிக்க கூடாது என்று இங்கே நாம் உரக்க குரல் எழுப்ப வேண்டும். இங்கே எழுப்பப்படும் குரல் டெல்லி வரை எட்ட வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழக அரசும் ஈடுபட வேண்டும்.
விடுதலைப்புலிகள் என்ற பூச்சாண்டியை காட்டி தமிழர்களின் தன்மானத்தை மழுங்கடிக்க செய்யும் எத்தகைய முயற்சியிலும் நம்மில் எவரும் ஈடுபடவேண்டாம். இது ஓர் இனத்தின் தன்மான பிரச்சனை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர்களும், இங்குள்ள தமிழர்களும் ஒன்றுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களை காக்கும் பிரச்சனையில் அரசியல் வேண்டாம். இதில் அரசியலை ஒதுக்கி வைத்து விடுவோம். இலங்கைத் தமிழர்களை காக்கும் முயற்சியில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். தமிழர்கள் சார்பில் தமிழக அரசும், முதலமைச்சரும் முன் நின்று மேற்கொள்ளும் முயற்சிக்கு துணை நிற்போம்.
தமிழக அரசும், முதலமைச்சரும் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி விட்டோம் என்பதோடு கடமை முடிந்து விட்டது என்று கருதிவிடக்கூடாது.
இலங்கை அதிபருடன் நமது பிரதமர் நேரடியாக பேசவேண்டும் என்றும், இந்தியாவில் இருந்து உடனடியாக உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை அனுப்பி இலங்கை தலைவர்களை சந்தித்து போரை நிறுத்தும்படியும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், இனி இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தர வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்பதை மனதில் நிறுத்தி செயல்பட அனைவரும் முன்வரவேண்டும்'' என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.