இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கபட நாடகம் ஆடுவது யார்? என்பதை தமிழக மக்கள் அறிவார்கள் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, கருணாநிதியின் கபட நாடகத்தை கண்டு தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
அவருடைய குற்றச்சாற்றுகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று கேள்வி- பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கனிமொழி பற்றி ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்துள்ள கருணாநிதி, "ராஜினாமா கடிதத்தை உடனடியாக மாநிலங்களவை தலைவரிடம் கனிமொழி ஏன் கொடுக்கவில்லை என்று ஜெயலலிதா கேட்டுள்ளார்.
அவரது அவசரத்திற்கு காரணம் இலங்கைத் தமிழர் பிரச்சனை மீதுள்ள அக்கறை அல்ல; கனிமொழி எப்படியாவது எம்.பி. பதவியில் இருந்து வெளியே வந்துவிடமாட்டாரா? என்ற நல்லெண்ணம் தான் காரணம்' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு 2 வார காலம் அவகாசம் கொடுத்திருப்பது மிகப் பெரிய மோசடி நாடகம் என்று ஜெயலலிதா கூறியிருப்பதற்கு பதில் அளித்துள்ள கருணாநிதி, "இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் தான் பதில் கூற வேண்டும்' என்று கூறியுள்ளார்.
கபட நாடகம் என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாற்றுக்கு பதில் அளித்துள்ள கருணாநிதி, "கபடம் என்றால் வஞ்சகம் என்று அகராதியில் பொருள் கூறப்பட்டுள்ளது. அதற்கு தமிழகத்தில் பொருத்தமானவர்கள் யார்? என்பதை தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
சிங்களர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா கருத்து கூறியிருப்பதை இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகர் பாசில்ராஜபக்சே சுட்டிக் காட்டியிருப்பது பத்திரிகையில் வெளி வந்திருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வராவிட்டாலும் அதில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்றுள்ள ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோவை கருணாநிதி பாராட்டியுள்ளார்.
"தி.மு.க.வினர் மத்திய அமைச்சர்கள் பதவியிலிருந்தும் விலக வேண்டும்'' என்று வைகோ கூறியிருப்பதற்கு பதில் அளித்து கருணாநிதி, "எம்.பி.'' பதவியிலிருந்து விலகினாலே; அமைச்சர் பதவியும் தானாகவே போய் விடும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க. அமைச்சரவையிலே தி.மு.க. அங்கம் பெற்றிருந்த போது, அமைச்சரவை பதவிகளைத் தான் துறந்து விட்டு டி.ஆர்.பாலு, ஆ. ராஜா ஆகியோர் வெளியே வந்தார்கள் என்பதை கருணாநிதி நினையூட்டியுள்ளார்.