என் பெயரை பயன்படுத்தி சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களால் பாதிக்கப் பட்டோர் உடனடியாக அருகிலுள்ள காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கவும்'' என்று முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த சில மாதங்களாக என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நிலம் வாங்குதல், விற்பனை செய்தல், கடை, வீடு காலி செய்தல், பணம் கொடுக்கல், வாங்கல், ஆக்கிரமிப்பு போன்ற சமூக விரோத செயல்களிலும், இன்னும் இதுபோன்ற பல பிரச்சனைகளிலும் என் பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற நாகரீகமற்ற செயல்களில் நான் எப்பொழுதும் ஈடுபட்டதும், பரிந்துரை செய்ததும் கிடையாது.
என்னுடைய இத்தனையாண்டு கால பொது வாழ்வில் தி.மு.க.வினருக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் இன்று மட்டும் அல்லாது என்றென்றும் உதவிகள் மட்டுமே செய்து வருகிறேன். பிறரை துன்புறுத்தி இன்னல்கள் ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணம் என்றென்றும் எனக்கு இருந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை.
சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கொடைக்கானல் மற்றும் பல இடங்களில் மதுரையில் உள்ளவர்களும் அந்தந்த பகுதியினைச் சேர்ந்தவர்களும் 'மதுரை அண்ணன் சம்பந்தப்பட்டுள்ளார்' என்று என் பெயரை தவறாக பயன்படுத்தி பஞ்சாயத்து செய்தல், மிரட்டுதல் போன்ற செய்திகள் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
என் பெயரை பயன்படுத்தி இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களால் பாதிக்கப் பட்டோர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை தங்களுக்கு அருகிலுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கவும்.
மேலும் மு.க.அழகிரி, 25-இ, சத்யசாயி நகர், மதுரை-625003 என்ற எனது முகவரிக்கு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு என்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டு வருமாறு வேண்டுகிறேன்'' என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.