சென்னையில் இன்று காலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இலங்கையையொட்டி வங்கக் கடலில் மெலிந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இலேசான மழை பெய்தது. இன்று காலையில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
தீபாவளி நெருங்கி வரும் வேளையில் பொதுமக்கள் ஜவுளிக்கடை, நகைகடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்று காலையில் இருந்தே மழை பெய்ததால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
அலுவலகத்திற்கு செல்வோர், மாணவ- மாணவிகள் பெரும் அவதிப்பட்டனர். சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளான மடிப்பாக்கம், வேளச்சேரி, வில்லிவாக்கம் ஆகியவற்றில் மழை நீர் குளம் போல் காட்சி அளிக்கிறது.
சென்னையில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் 9.7 மி.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 1.5 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இதற்கிடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெதுவாக நகர்ந்து கன்னியாகுமரி கடல் பகுதிக்கு சென்றது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் மெலிந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப் போது மிதமானது முதல் பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.