2 வாரத்துக்குள் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் கெடு விதித்துள்ளதால் வரும் 17ஆம் தேதி நடக்க இருந்த கடையடைப்பு போராட்டம் வரும் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, தீபாவளி பண்டிகை கால வியாபாரம் என்ற போதிலும், 'இன உணர்வை வெளிப்படுத்த வேண்டும்' என்பதால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வரும் 17ஆம் தேதி கடையடைப்பு போராட்டத்தை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் மத்திய அரசுக்கு கொடுத்து இருக்கும் இரண்டு வார காலக்கெடுவை மதித்து எமது பேரவை அறிவித்து இருந்த கடைடைப்பு போராட்டத்தை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க முடிவு எடுத்து இருக்கிறோம்.
2 வாரங்களுக்குள் இலங்கை இனப்படுகொலையும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும் தடுத்து நிறுத்தப்படவில்லையெனில், 17ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கடையடைப்பை 31ஆம் தேதி முழுமையாக நடத்தவது என்று எமது பேரவை முடிவுஎடுத்து உள்ளது'' என்று வெள்ளையன் தெரிவித்துள்ளார்.