சென்னை: இலங்கைப் பிரச்னை தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.,க்கள் பதவி விலகுவார்கள் என்ற தீர்மானம் வெறும் கண்துடைப்பு நாடகம் என அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அனைத்து கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை. அவ்வாறு செய்தால் இந்திய உள் நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட வழிவகை செய்தது போல் ஆகிவிடும், இது நாட்டின் இறையாண்மையை குலைக்கும்.
இந்த அடிப்படை கூட தெரியாமல் ஒருவர் 5 முறை முதல்வர் பதவியில் இருந்துள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது.
இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயற்சி அளிப்பதும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது நடைபெறும் ராணுவத் தாக்குதலும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் முக்கியமான பிரச்னை.
இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தத்தில் அப்பாவித் தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதை விடுதலைப் புலிகள் தடை செய்யக்கூடாது என்று கருணாநிதி ஏன் வலியுறுத்தவில்லை.
மத்திய அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பது காலம் கடத்தும் முயற்சி. இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை தமிழக மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் திமுகவும் தனது ஆட்சி அதிகாரத்தை துறக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.