இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள பிற அரசியல் கட்சிகளின் அணுகுமுறைக்கும், பா.ஜ.க.வின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாட்டை தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள குட்டிக்கதை: கணவனும் மனைவியும் தங்கள் குழந்தையோடு கடற்கரைக்கு செல்கிறார்கள். தம்பதிகள் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்கும் போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடல் அலை இழுத்து சென்று மீண்டும் வெளியே வீசி விடுகிறது. குழந்தை மயக்கத்தில் கிடக்கிறது.
அந்த நேரத்தில் கணவன் மனைவியிடம், "குழந்தை மீது அக்கறை இல்லாமல் இருக்கிறாயே' என்று கடிந்து கொள்ள, அதற்கு மனைவியோ "உங்களுக்கு அந்த குழந்தை மீது அக்கறை இல்லையா? நீங்கள் அதை பார்த்திருக்க வேண்டாமா?' என்று கூறுகிறாள்.
இந்த நேரத்தில் மனைவிக்கு ஆதரவாக சிலரும், கணவனுக்கு ஆதரவாக சிலரும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் மயக்கமுற்ற குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையோடு செயல்படும் ஒரு நண்பனைப்போல, இலங்கைத் தமிழர் பிரச்சனையை பா.ஜ.க. அணுகியுள்ளது.
எங்களை பொறுத்தவரை யார், யாருக்கு ஆதரவு என்பது பிரச்சனை அல்ல; அங்கு உள்ள தமிழர்கள் உடனடியாக காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான் நோக்கம் என்று குட்டிக்கதை மூலம் தெரிவித்துள்ளார் இல. கணேசன்.