1990-91 வரையில் உள்ள விற்பனை வரி, தண்டம் மற்றும் வட்டி நிலுவைத் தொகைகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் கருணாநிதியின் ஆணைக்கேற்ப வணிகவரித் துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா தமிழக சட்டப்பேரவையில், 2008-2009ஆம் ஆண்டிற்கான வணிகவரித்துறை மானியக்கோரிக்கையின் போது, 1951-52 முதல் 1990-91 வரை உள்ள காலத்திற்கான வரி நிலுவைகளை தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
1951-52 முதல் 1990-91 வரையுள்ள காலத்திற்கு தமிழ்நாடு பொது விற்பனை வரிச்சட்டம் மற்றும் மத்திய விற்பனை வரிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் ரூ.98.71 கோடி நிலுவையில் உள்ளது.
பல ஆண்டுகளாக நடவடிக்கைகள் மேற்கொண்டும், நொடித்துப்போன வணிகர்களிடமிருந்து வரி நிலுவையை வசூல் செய்தவற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், அத்தகைய நலிந்த வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 1990-91 வரையில் உள்ள வரி, தண்டம் மற்றும் வட்டி நிலுவைத் தொகைகளை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி செய்ய தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்யும் அதிகாரம் அந்தந்த வணிகவரி மாவட்ட உதவி ஆணையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரி விதிப்பு அல்லது வரி வசூல் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை என்றும் வரி வசூலிப்பதற்காக அசையாச் சொத்துக்கள் ஏதும் வருவாய் வரி மீட்புச் சட்டத்தின்கீழ் கையகப்படுத்தவில்லை என்றும் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னர் வணிகம் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் வரிவிதிப்பு அலுவலர்கள் வழங்கும் சான்றுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர்கள் வரி நிலுவைகளை தள்ளுபடி செய்வார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.