இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நிலையில் ஒரு திடீர் நடவடிக்கையாக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பின்தேதியிட்ட ராஜினாமா கடிதத்தை அவர் இன்று, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை 2 வாரத்துக்குள் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என்று சென்னையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தவிர மேலும் 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.