தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனிதநேயமற்ற முறையில் நடந்து கொள்ளும் இச்செயலுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப் படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டு பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை, நாளுக்கு நாள் பெருகி வருவதால் ஏற்கனவே கண்ணீர்க் கடலில் மிதக்கும் இலங்கைத் தமிழர்கள், சிங்கள இராணுவத்தின் தாக்குதலையும் கண்டு, எங்களுக்கு அபயமளித்துக் காப்பாற்ற இந்த உலகில் நாதியே கிடையாதா? என்ற கவலையில், வாடி வதங்கி, இதற்கோர் விடிவு எப்போது ஏற்படும் என்று விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர்.
இந்தப் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்தியப் பேரரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்றிட வேண்டும்.
இந்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள், இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே, இலங்கை அரசால் பயன்படுத்தப்படுவதால் அவற்றை மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும்..
இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் 2 வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது.
போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கும், உணவு, உறையுள், மருந்து போன்றவற்றை வழங்குவதோடு, மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கும் மத்திய அரசு முன்வரவேண்டும்.
மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறுவழிகளில் திருப்பி விடப்படாமல், பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகச் சென்றடைவதற்கு ஏற்ற வகையில் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையினை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனிதநேயமற்ற முறையில் நடத்துவதும், கருணை துளியுமின்றி சுட்டுக் கொல்வதுமான கொடுமைகள், தொடர்ந்து நடைபெற்று வருவதை மிகவும் கண்டிப்பதோடு, மனித நாகரிகமற்ற, மனித உரிமைகளை முழுவதுமாக மீறுகின்ற இச்செயல்களுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.