தமிழகத்தில் ஏற்கனவே மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நெய்வேலி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்திருக்கும் போராட்டம் நடைபெற்றால் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் இதில் முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக தலையிட்டு பிரதமரிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அறிவித்திருக்கும் போராட்டம் காரணமாக மின் உற்பத்தி மேலும் குறையுமேயானால், தமிழகத்தில் மின்வெட்டு நிலைமை மேலும் மோசமாகும்.
இப்போது கிடைக்கும் மின்சாரத்தையும் இழந்து தவிக்கும் பரிதாப நிலைக்கு, தமிழக மக்கள் தள்ளப்படாமல் இருக்க வேண்டுமானால் நெய்வேலி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை, என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.
மின் தட்டுப்பாடு காரணமாக தமிழக மக்கள்படும் அவதிகளைப் புரிந்து வைத்திருக்கிற நெய்வேலி அனல் மின்நிலைய தொழிலாளர்கள் சமூக நலன் பாதிக்கப்படாமல் தங்களது போராட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். நெய்வேலி தொழிலாளர்கள் உரிமைகள், கோரிக்கைகள் நிறைவேற சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும்.
எனவே, தமிழகத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை மனதில் கொண்டும், சுமார் 13 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டும், தமிழக முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரிடம் வலியுறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும்'' என்று சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.