ஈரோட்டில் ரூ.16.5 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
ஈரோட்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குதல் உள்ளிட்ட ரூ.16.5 கோடி நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பவளத்தாம்பாளையம் ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குதல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய திட்டங்கள் தொடக்கவிழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.39 கோடியே 72 லட்சம் மதிப்பில் 1539 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.15 கோடியே 59 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ள 1,830 பணிகளை திறந்து வைத்தார்.
மேலும் ஊராக வளர்ச்சி துறையின் பொன்விழா கிராம சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்திலுள்ள 2,500 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.14 கோடியே 20 லட்சம் சுழல்நிதி வழங்கினார். 100 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.5 கோடி கல்விக்கடன் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவதன் மூலம் அண்ணா கண்ட கனவை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி விட்டதாக கூறினார்.