மதுரை மாநகராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், மு.க.அழகிரியின் அராஜகப் போக்கைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 13ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சீர்கேடுகளைச் சந்தித்து வருகின்றன.
கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் தலையீடு காரணமாக, மதுரை மாநகராட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. மாநகராட்சியின் அடிப்படை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.
ஒப்பந்ததாரர் மாநகராட்சி துணை மேயரின் பினாமி என்றும், பணியாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தின் ஒரு பகுதியை ஒப்பந்ததாரர் எடுத்துக் கொள்கிறார் என்றும், தி.மு.க.வைச் சேர்ந்த ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைக்கு செல்லாமலேயே சம்பளம் பெறுகின்றனர் என்றும், இவ்வாறு ஒப்பந்ததாரரால் கொள்ளை அடிக்கப்படும் பணம் மு.க.அழகிரிக்குச் செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து ஒப்பந்தங்களும் மு.க. அழகிரி கைகாட்டும் நபர்களுக்கே கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் வருவாயைப் பெருக்க வேண்டிய இனங்களில் வருவாயைப் பெருக்காமல், சொத்து வரி, வணிக வரி, தொழிற்சாலை வரி ஆகியவற்றை உயர்த்தி மக்கள் மீது நிதிச் சுமையை மாநகராட்சி சுமத்தியுள்ளது.
வருவாய் அலுவலர், மேற்கு மண்டல உதவி ஆணையர், மாமன்ற செயலர், முதன்மை நகரமைப்பு அதிகாரி, தலைமை நிர்வாக அதிகாரி போன்ற பதவிகள் தற்போது காலியாக உள்ளன என்றும், மாநகராட்சியில் உள்ள பல பிரிவுகளில் தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மாநகராட்சிப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுத் தொல்லை, சுகாதாரச் சீர்கேடு மற்றும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இது போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் மதுரை மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கோடு இருந்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.
எனவே, மதுரை மாநகர மக்களின் தேவைகளையும், துன்பத்தையும் போக்குகின்ற வகையில், மதுரை மாநகராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், மக்கள் விரோதச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் அராஜகப் போக்கைக் கண்டித்தும், அ.இ.அ.தி.மு.க. மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், வரும் 13ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.