தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பரவலாக மழை பெய்துள்ளதாகவும், கேரளா, கர்நாடகாவின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடனும், சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இன்று மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.