தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டை சமாளிக்க உயர் அழுத்த தொழிற்சாலைகள் இனி 8 மணி நேரம் மின்வெட்டை பின்பற்ற வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின்வெட்டை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த நேரத்தில் ஜெனரேட்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையை பின்பற்ற தவறினால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 48 மணி நேரத்திற்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மீண்டும் இணைப்பு தருவதற்கான உரிய கட்டணங்கள் பெற்றுக் கொண்ட பிறகே மின் இணைப்பு தரப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் 6 1/2 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது. அதன்படி, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பகலில் 4 மணி நேரமும், மாலையில் 1 மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் மின்வெட்டு அமல் செய்யப்படும். சென்னை நகரைப் பொறுத்தவரை, தற்போது அமலில் உள்ள மின்வெட்டே பின்பற்றப்படும்.