இலங்கை தமிழர் பிரச்சனையில் அமைதி தீர்வு காண்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழர்களும் தங்கள் வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு ஓரணியில் திரள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் "ஓரணியில் திரளக் கூடாதோ?" என்ற தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள கவிதையில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈழத்தில் அமைதி உருவாக வேண்டும் என்று வேண்டி நிற்கும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் அனைத்து தமிழர்களும் தங்களிடையே ஆயிரம் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அனைவரும் ஒன்றுபட்டு இலங்கை தமிழர்களின் இன்னலை தீர்க்க ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை அறிந்ததும் மத்திய அரசு நம்முடைய கோரிக்கைகளை ஏற்று அவர்களின் கண்ணீர் துடைக்க நடவடிக்கை எடுக்க துவங்கியிருப்பதையும் அவர் தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நார்வே தமிழ்ச் சங்க நண்பர்கள், லண்டன் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் குழு, போன்ற வெளிநாடுகளில் வாழும் பல்வேறு தரப்பினரும் , இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் சேனாதிராஜா எம்.பி., வட அமெரிக்க தமிழ்ச்சங்க பிரதிநிதிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதாகவும், இந்த பிரச்சனையில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து கடிதங்கள் எழுதியிருப்பதையும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.