உணவு, உடை, இருப்பிடம், மருத்துவப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டி அனுப்ப மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்; உள்நாட்டுச் சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி சிறிதும் அக்கறையின்றி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினேன்.இலங்கைத் தமிழர் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடும், அ.இ.அ.தி.மு.க.வின் நிலைப்பாடும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.1.
இலங்கையின் மற்ற குடிமக்களைப்போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள். அவர்கள் யாருக்கும் இரண்டாந்தரமானவர்கள் அல்ல.2.
சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வியில், வேலை வாய்ப்பில் சமத்துவம் பெறவும், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் நெடிய போராட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.3.
சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம்.4.
இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தமிழர்கள் தங்களுக்கென சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை நாங்கள் புரிந்து ஏற்றுக்கொள்கிறோம். பகை மூண்டு, திசைமாறிப்போன ஆயுதப் போராட்டத்தினால், பல்லாயிரம் தமிழர்கள் அத்தகைய பகையில் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுகிறோம். அதற்குக் காரணமான ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கிறோம். அத்தகைய சகோதரப் பகையினால் மூண்ட ஆயுதப் போரின் விளைவாக, இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். ஏற்க மறுக்கிறோம். எதிர்க்கிறோம். தமிழர் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தலைவர்கள் இலங்கை மண்ணிலேயே கொன்று குவிக்கப்பட்டதை, பல தமிழ்த் தலைவர்கள் வெடிகுண்டு வீசி பொசுக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறோம். எதிர்க்கிறோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இருவேறு பக்கங்கள் உள்ளன என்பதை தெளிவுற உணர வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கென்ற தமிழர்களின் போராட்டம் என்பது ஒருபுறம்; ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது என்பது மறுபுறம். முதலாவதை ஆதரிக்கிறோம். இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறோம்.
தமிழர்களின் சுய உரிமைப் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, நல்லெண்ணம் என்றைக்கும் மாறாதது. பயங்கரவாதச் செயல்களை, ஆயுத மோதல்களை, அதிலும் அத்தகைய மோதல்களால் இந்தியாவின் சட்டம் ஒழுங்கும், பொது ஒழுங்கும், அமைதியும், இறையாண்மையும் சீர்குலைவதை ஒரு நாளும் ஏற்க முடியாது. தமிழ் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம். அதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை, இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க கருணாநிதி பயன்படுத்த வேண்டும்; பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபருடன் பேசி, தமிழர்கள் மீதான இனப் படுகொலை குறித்த இந்தியாவின் கவலையைத் தெரிவித்து, அதனை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதி பிரதமரை கேட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் கேட்டேன்.
நான் இப்படி வலியுறுத்திக் கூறியதால், "பிரதமருக்கு எல்லோரும் தந்தி அனுப்புங்கள்'' என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி. இந்த அறிவிப்பு மக்களிடம் எடுபடவில்லை, அவ்வாறு செய்ய மக்கள் தயாராக இல்லை என்பது தெரிந்ததும், மத்திய கூட்டணி அரசை விட்டே வெளியேறுவோம், அதைப்பற்றியும் யோசிப்போம் என்று பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.
தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக, ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இடம்பெயர்ந்து, வசிக்க இடமில்லாமல், அவர்களுடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உண்ண உணவு, தங்க இருப்பிடம், மருந்து ஆகியவை இல்லாமல் வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை ராணுவத்தின் உக்கிரத் தாக்குதலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். பல மாதங்களாக இந்த நிலைமைதான் இலங்கையில் நிலவுகிறது.
தந்திகள் அனுப்புவதனாலோ, அல்லது இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கீழ்நிலை அலுவலரை அழைத்து கண்டனம் தெரிவிப்பதனாலோ, பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மத்தியிலும், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள் குறித்து எள்ளளவாவது கவலை இருக்க வேண்டாமா?
உணவு, உடை, இருப்பிடம், மருத்துவப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டி அனுப்ப மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.