இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதி டெல்லிச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேச வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், அரசியல் ரீதியாக நிரந்தர தீர்வு காணவும் முதலமைச்சர் கருணாநிதி டெல்லி சென்று பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாட்டை போக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம்பெற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கூறிய அவர் மின்தடை காரணமாக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாற்றினார்.
பின்னர் கூட்டணி குறித்து பதில் அளித்த அவர், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்ற தேர்தல் வியூகம் குறித்து பொதுக்குழு, செயற்குழுவில் கலந்தாலோசிக்கப்பட்டு தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்று ஜி.கே. மணி கூறினார்.