கோவை மாவட்டம் அன்னூரில் இஸ்லாமியருக்கு சொந்தமானது உள்ளிட்ட இரண்டு சுடுகாடுகளை காலி செய்யக் கூறும் உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் கோவை மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித் துறை உதவி செயற் பொறியாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அன்னூர் நகரப் பஞ்சாயத்துத் தலைவர் வசந்தாமணி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பது:
அன்னூர் நகர பஞ்சாயத்து, அன்னூர் தாக்னி சுன்னத் மஸ்ஜித் ஜமாத் குழு ஆகியவற்றின் பராமரிப்பில் உள்ள சுடுகாடுகள் ஏரிப் புறம்போக்கு நிலத்தில் உள்ளன. இவை பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளன.
கடந்த 2005 இல் பஞ்சாயத்தால் பராமரிக்கப்படும் சுடுகாட்டில் எரிமேடை அமைப்பதற்கு ரூ.1.23 லட்சம் ஒதுக்கி கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சுடுகாட்டை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்று பொதுப் பணித் துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் டி.சுதந்திரம், கே.கண்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து ஓருவார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர், பொதுப் பணித் துறை உதவி செயற் பொறியாளர் ஆகியோருக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.