இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நேரடியாகத் தலையிட்டு, சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடம் பேசி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொலைதூர அமெரிக்காவில் உள்ள அதிபர் ஜார்ஜ் புஷ்சிடம் அடிக்கடி பேசும் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த கோரி அருகிலுள்ள சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடம் பேசுவதற்கு நேரமில்லை என்று குற்றம்சாற்றினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு பிரச்சனையாக மட்டும் கருதாமல் அகில இந்திய பிரச்சினையாக அணுகப்பட வேண்டும் என்றார் டி.ராஜா.
மத்திய அரசு இந்த விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று கூறிய அவர், அரசு அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் பேசினால் போதாது. அரசு, அரசியல் மட்டத்திலும் பேச வேண்டும் என்றார்.
சிறிலங்க அதிபர் ராஜபக்ச, அந்நாட்டு பிரதமருடன் இலங்கைத் தமிழர் பிரச்சனைப் பற்றி அரசியல் மட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேச வேண்டும் என்றும் ராஜா கோரிக்கை வைத்தார்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற டி.ராஜா, கச்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு ஆராய்ந்து அதன் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்தப் பிரச்சனையிலும் பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.