இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
விழுப்புரத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதோடு, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு, இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதேபோல், சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு இலங்கைக்கு மத்திய அரசு அளித்து வரும் ராணுவ உதவியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பின்னர் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் உருவ பொம்மையை தீவைத்துக் கொளுத்தினர். இதேபோல் மதுரையிலும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு ராஜபக்சேயின் உருவ பொம்மையை எரித்தனர்.
அப்போது, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்டிய அவர்கள், இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.