இலங்கைத் தமிழர் இன்னல் துடைத்திடவும், அங்கே போர் நிறுத்தம் ஏற்படவும், மத்திய அரசின் துணைநாடி மயிலைப் பொதுக்கூட்டத்தில் வெளியிட்ட கருத்துகளை தீர்க்கமாகவும், தெளிவாகவும் அவற்றுக்கு மாறாக திரித்தும் வெளியிட்ட சில ஏடுகளை அடையாளம் காட்டி, விழிப்பாக இருப்போம் என எச்சரிக்கவே இந்தக் கடிதம் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ''உடன்பிறப்பே, தொடர்ந்து உனக்கு; "நாட்டு நிலவரங்கள், கழகத்தின் நிலை, மாற்றுக் கட்சியினர் கருத்துகளுக்கு மறுப்பும் விளக்கமும்'' என்ற வகையில் கடிதம் எழுதும் நான்; இன்றைக்கு இலங்கைத் தமிழர் இன்னல் துடைத்திடவும், அங்கே போர் நிறுத்தம் ஏற்படவும், மத்திய அரசின் துணைநாடி மயிலைப் பொதுக்கூட்டத்தில் வெளியிட்ட கருத்துகளை; தீர்க்கமாகவும், தெளிவாகவும், அவற்றுக்கு மாறாக திரித்தும் வெளியிட்ட சில ஏடுகளை அடையாளம் காட்டி; விழிப்பாக இருப்போம் என எச்சரிக்கவே இந்தக் கடிதம்; சில ஏடுகளின் செய்திகளைத் தொகுத்து உனக்கு எழுதியுள்ளேன். நமது எழுச்சியை, தமிழர்களின் உணர்ச்சியை, வெறி பிடித்த சிங்களவர்களால் கூட புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால், இங்குள்ள சிறு நரிகள், சிலந்திப் பூச்சிகள் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இந்த என் கடிதத்தை திரும்பப் படித்தால் உனக்கும் அவர்கள் யாரென்று தெளிவாகப் புரியும்.
புதுடெல்லியில் இருந்து வெளிவரும் 7.10.2008 நாளிடப்பட்ட "தி எகனாமிக் டைம்ஸ்'' என்ற ஆங்கில நாளேட்டில், "தி.மு.க. கொடுத்த அழுத்தத்தினால் இலங்கை நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது'' என்ற தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தி வருமாறு:
"இலங்கையில் ராணுவ நடவடிக்கைகளின் காரணமாக தமிழ் மக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மத்திய அரசு அதுகுறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும், ராஜபக்சே அரசானது இலங்கை தமிழ் மக்களிடத்தும், நிராயுதபாணியாக உள்ள இந்திய மீனவர்களிடத்தும் நிதானப் போக்கைக் கடை பிடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
"வழக்கத்திற்கு மாறாக- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் டெல்லியில் உள்ள இலங்கைத் துணைத்தூதுவர் பாலி தகனேகோடா என்பவரை அழைத்து ராணுவ நடவடிக்கைகளினால் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து இந்தியாவின் வருத்தத்தையும், கவலையையும் தெரிவித்துக் கொண்டார்''.
"மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். இந்தப் பிரச்சனையில் உள்ள அரசியல் அம்சத்தின் காரணமாக இலங்கை அரசுக்கு கடுமையான செய்தியை அனுப்பிட வேண்டுமென்று நாராயணன் முடிவு செய்தார்.
தமிழக முதல்வர் மத்திய அரசின் மீது தேவையான அழுத்தத்தை செலுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அனைவரும் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்தியப் பிரதமருக்கு தந்திகள் அனுப்பிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.''
டெல்லியில் இருந்து வெளிவரும் 7.10.2008 நாளிடப்பட்ட "தி இந்து'' ஆங்கில நாளேட்டில் "இலங்கை நிதானப் போக்கைக்கடைபிடிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது'' என்ற தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தி பின் வருமாறு:
"ராணுவ நடவடிக்கையின் காரணமாக நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்திய நாட்டின் கவலையையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதற்காக இலங்கை நாட்டின் தூதுவர் இன்று மத்திய அரசால் அழைக்கப்பட்டார். இலங்கை நாட்டின் வடக்குப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் பெருமளவிற்குப் பரவி வருவதால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் இந்தியாவிற்கு பெரும் கவலையையை அளித்துள்ளது. இலங்கை அரசு நிதானமானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சிறு பான்மையினராக உள்ள மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதைப் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.
மனிதாபிமான சூழல் பாழாகி வருவதும் அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டன. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தேவையான உணவு மற்றும் மருத்துவப்பொருட்கள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் பற்றியும் மிகுந்த கவலை தெரிவிக்கப்பட்டது. இப்படி நடைபெறுவது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட புரிந்துணர்விற்கு எதிரானதாகும்.
இலங்கை கடற்படை இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்கள் மனிதாபிமான வாழ்க்கை பரிமாணங்களை மறந்துவிடக்கூடாது.''
டெல்லியில் இருந்து வெளிவரும் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'' என்ற மற்றொரு ஆங்கில நாளேட்டில் 7.10.2008 அன்று "இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்-பிரதமர்'' என்ற தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தி வருமாறு:
"இந்தியப் பிரதமருக்கு இலங்கைப் பிரச்சனை குறித்து தந்திகள் அனுப்ப வேண்டுமென்று தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்ட மறுநாளே, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முதல்வரோடு தொடர்பு கொண்டு இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உறுதி அளித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங் இன்று (6.10.2008) காலை 11.30 மணி அளவில் முதல்வர் கலைஞரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கைப் பிரச்சனை குறித்துப் பேசினார். அப்போதும் தமிழக முதல்வர் இலங்கைப் பிரச்சனை குறித்தும் இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கை குறித்தும் இனப்படுகொலை குறித்தெல்லாம் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்ததுடன் நின்றுவிடாமல், உடனடியாக மத்திய அரசு டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இலங்கை தமிழினப் படுகொலை குறித்த கண்டனத்தை அவர் மூலமாக தெரிவித்திட வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். பிரதமரும் கலைஞர் கூறியவற்றை மிகுந்த அக்கறையுடன் கேட்டு முதல் வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்-என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.''
டெல்லியில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ்களில் இலங்கைப்பிரச்சினை குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி இவ்வாறாக செய்திகள் வெளியாகி உள்ளதோடு- சென்னையிலிருந்து வெளி வரும்,
"தி இந்து'' நாளிதழிலும் "இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று கலைஞர் நம்பிக்கை கொண்டுள்ளார்'' என்ற தலைப்பிலும்;
"தி டைம்ஸ் ஆப் இந்தியா'' நாளிதழிலும் "தமிழகத்தின் உணர்வுகளை அலட்சியப்படுத்த வேண்டாம்-மத்திய அரசுக்கு தமிழக முதல்வர்'' என்று தலைப்பிட்டும்;
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'' நாளிதழிலும் "கலைஞரிடம் இந்தியப் பிரதமர் நடவடிக்கை பற்றி உறுதி அளித்துள்ளார்- இலங்கையில் இனப் படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்'' என்ற தலைப்பிலும்;
"டெக்கான் கிரானிக்கல்'' நாளிதழிலும் "இலங்கைப் பிரச்சனையில் பதவியைத் துறக்கவும் தயார் என்றார் முதல்வர்'' எனும் தலைப்பி லும்;
"தி எகனாமிக் டைம்ஸ்'' நாளிதழிலும் "இலங்கையில் நடைபெறும் இனப் படுக்கொலை குறித்து இந்தியா இலங்கைக்குக் கண்டனம்'' என்ற தலைப்பிலும்;
முறையாகவும், சரியாகவும் நடந்த நிகழ்ச்சிகள், அறிக்கைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் செய்திகள் வெளி யிடப்பட்டுள்ளன.
ஆனால், டெல்லியில் இருந்து வெளிவரும் 7.10.2008 நாளிடப்பட்ட "தி இந்துஸ்தான் டைம்ஸ்'' எனும் ஆங்கில நாளிதழில் மட்டும் சென்னை கூட்டத்தில் நான் பேசாததைப் பேசியதாகத் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பத்திரிகையில் எடுத்த எடுப்பிலேயே "தி.மு.க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளிவரும் என எச்சரிக்கை'' என்ற தலைப்பிட்டு, "இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இதுவரை எடுத்து வந்துள்ள அணுகுமுறைக்கு மாறாக- தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தொடுத்துள்ள தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்று இலங்கைக்கு மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை பலனளிக்காமல் போகுமானால்-தமிழகத்தை ஆளும் தி.மு.க; மத்தியக் கூட்டணி அரசில் இருந்து விலகுவது சம்மந்தமாக பரிசீலிக்கும்'' என்று நான் பேசியதாக ஒரு பொய்ச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
"இந்துஸ்தான் டைம்ஸ்'' பெரியதும், பிரபலமானதுமான பத்திரிகை! அதுவே இப்படி என்றால் சில்லரைகளைப் பற்றி கேட்கவும் வேண்டுமோ! என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.