விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்க காரணமான மின்வெட்டை அமல்படுத்திய தமிழக அரசைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் அக்டோபர் 9ஆம் தேதி விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் வாரத்திற்கு ஒரு நாள் மின்சார விடுமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, தினசரி கிட்டத்தட்ட 20 மணி நேர மின்வெட்டும் நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற மின்வெட்டின் காரணமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ள 1,200 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி வாடிப்போகும் நிலையில் உள்ளது.
இதுமட்டுமல்லாமல், 250க்கும் மேற்பட்ட ஜல்லி உடைக்கும் இயந்திரங்கள் பாதிக்கப்பட்டு அங்கு பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக ஜல்லியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், தொடர் மின்வெட்டு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தி.மு.க அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். எவ்வளவோ போராட்டங்களை நடத்தியும், மின்வெட்டைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் அரசு எடுப்பதாக தெரியவில்லை. இத்தகைய மெத்தனப்போக்கிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கும், வேளாண் உற்பத்தி பாதிப்பதற்கும், தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கும், சிறு தொழில்கள் பாதிக்கப்படுவதற்கும் காரணமான மின்வெட்டை அமல்படுத்திய தி.மு.க அரசைக் கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் வரும் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.