இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற கருணாநிதி எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாற்றியுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு மற்ற கட்சியினர் போராட்டம், உண்ணாவிரதம் நடத்துவதை பார்த்துவிட்டு, பொதுக் கூட்டம், பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள் என்று கூறுவது, மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம் என்று கூறியுள்ளார்.
''கருணாநிதி வழிகாட்டுதலில்தான் இந்திய அரசு இயங்குகிறது என்று கூறப்படுகிறது. அப்பாவித் தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப்படுவதைத் தடுக்க, போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசிலிருந்து நாங்கள் பதவி விலக நேரிடும் என்று முதலமைச்சர் ஏன் சொல்லக்கூடாது?'' என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
''பதவி வாங்குவதற்கும், சேது சமுத்திர பிரச்சனை, என்.எல்.சி. பிரச்சனை ஆகியவற்றுக்கும் மத்திய அரசை மிரட்டுபவர்கள், தொலைபேசி மூலமாக பேசியே இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாமே?'' என விஜயகாந்த் கேட்டுள்ளார்.
படித்து விட்டு பலர் வேலையில்லாமல் உள்ளதால்தான் தீவிரவாதம் அதிகரிக்கிறது. வீட்டுக்கு ஒரு டிவி, அரசு வழங்குகிறது. டிவி கொடுப்பதை விட்டுவிட்டு வீட்டுக்கு ஒருவருக்கு ஏன் வேலை கொடுக்கக் கூடாது? அரசைக் கண்டு மக்கள் பயப்படக் கூடாது. நிமிர்ந்து நின்றால்தான் நல்லது நடக்கும். கோழையாக இருக்கக் கூடாது. இனிமேல் ஆட்சியாளர்கள்தான் ஏமாற வேண்டும். மக்கள் ஏமாறக் கூடாது.
அரசு போக்குவரத்து கழகங்களில் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதியில்லாத ஓட்டுனர்களை வேலைக்கு சேர்த்ததால், விபத்துகள் ஏற்பட்டு பலர் சாகிறார்கள். காவலர் வேலைக்கு 3 லட்சம், காவல்துறை உதவி ஆய்வாளர் வேலைக்கு 5 லட்சம் என்று லஞ்சம் வாங்கிக் கொண்டு வேலை தருகிறார்கள் என்று விஜயகாந்த் குற்றம்சாற்றினார்.