''அனைவரும் ஓரணியில் நின்று தமிழீழ விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும்'' ஜனநாயக முன்னேற்ற கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நம் அண்டை நாடான சிறிலங்கா சிங்கள பேரின அரசு தம் சொந்த மக்கள் மீது முப்படை தாக்குதலை நடத்தி கொண்டிருப்பதும் அதை உலக நாடுகள் மவுனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் அளவு கடந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாக உள்ளது.
கிளிநொச்சியில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் இப்போது அகதிகளாக தெருக்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பசியோடும் பட்டினியோடும் அந்த மக்கள் போருக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கொடூரமான சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு ஆதரவு தருவதாகவும் அவர்கள் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழீழ சிக்கலுக்கு விடிவுகாண தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி நம் கட்சியினர் அனைவரும் பிரதமருக்கு தந்திகளை அனுப்புமாறு வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஓரணியில் நின்று தமிழீழ விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் கருணாநிதியின் போர்க்குரல் எட்டு கோடி தமிழர்களின் உணர்வு- உணர்ச்சி குரல் ஆகும். அந்த உணர்ச்சிக் குரல்கள் அனைத்தும் பிரதமருக்கு தந்திகளாக குவியட்டும் தலைநகர் அதிரட்டும் என்று ஜெகத்ரட்சன் கூறியுள்ளார்.