ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சிமெண்ட் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு நேற்று நள்ளிரவு அரசு பேருந்து ஒன்று 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே சங்கரன்பள்ளம் என்ற இடத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே கரூரிலிருந்து கோவைக்கு சிமெண்ட் மூட்டை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, பேருந்தை கடந்து செல்ல முயன்ற போது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் பேருந்தும், லாரியும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே லாரி ஓட்டுனர் உள்பட 5 பேர் பலியானார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பேருந்து ஓட்டுனர், 2 குழந்தைகள் உள்பட மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 28 பேர் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.