உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை பெற அவர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பை உயர்த்தியதற்காக மத்திய அரசுக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில், வசதி படைத்தவர்களுக்கு இடம் ஒதுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அனுமதிக்கவே கூடாது எனவும், வசதி படைத்தவர்கள், ஏழை எளிய மக்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் இடஒதுக்கீடு சமமாக வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.
ஆனால் சமத்துவ மக்கள் கட்சி உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றதோடு, இடஒதுக்கீட்டின் முழுப்பயனும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அது சென்றடைய வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தது.
அதே நேரத்தில் பொருளாதாரத்தின் அளவுகோல் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்டு வருமானம் 2.5 லட்சத்தை 5 லட்சமாக உயர்த்திட வேண்டும் எனவும் எங்கள் கட்சி அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
எங்கள் கட்சியின் கருத்தையும், எண்ணத்தையும் பிரதிபலிப்பது போலவே, தற்போது மத்தியஅரசு ஆண்டு வருமானம் 4.5 லட்சம் என பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பொருளாதார அளவுகோலை நிர்ணயித்து அறிவித்திருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்று சரத்குமார் கூறியுள்ளார்.