இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருப்பதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈழத் தமிழர்களை பூண்டோடு அழிக்கும் இனவெறியாட்டம் இரக்கமற்ற முறையில், சர்வதேச மரபுகளை மீறி, மிக கொடூரமாக தலைவிரித்தாடுகிறது. எப்போதும் இல்லாத வகையில் தற்போது விமான குண்டு வீசி தாக்குதல் கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், நீருபூத்த நெருப்பாய் இருந்த தமிழக மக்களின் மனித நேய உணர்வு இப்போது கொழுந்துவிட்டெரிய தொடங்கிவிட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சிகள் என அனைத்து கட்சிகளும் தனது கண்டனத்தை வெளிப்படுத்த வருகின்றனர்.
இந்திய அரசு தலையிட்டு இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஒருமித்த குரலில் உரத்து முழங்கி வருகின்றனர். தமிழக ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் அனுப்ப முதலமைச்சர் கருணாநிதி, தனது கட்சியினருக்கு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்சி வேறுபாடின்றி, ஒட்டு மொத்த தமிழக மக்கள் அனைவருமே பிரதமருக்கு தந்திகள் அனுப்புவது என்பது இன்றியமையாதது. அந்த வகையில் முதலமைச்சர் கருணாநிதியின் இந்த அறிவிப்பை வரவேற்று, பாராட்டுவதுடன் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், தமிழகம் தழுவிய அளவில் தந்திகள் அனுப்பப்படும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.