இலங்கை தீவில் போர் முழக்கங்கள் கேட்க கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் படி சிறிலங்க அதிபருக்கு, இந்திய பிரதமர் நிர்ப்பந்தங்கள் கொடுக்க முதலமைச்சர் கருணாநிதி நெருக்குதல் கொடுக்க வேண்டும்'' பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருக்கிறது. தமிழர் பகுதிகள் மீது சிறிங்க ராணுவம் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி, அப்பாவி தமிழர்களை தினமும் கொன்று குவித்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக, உயிருக்கு எந்தவித உத்தரவாதமின்றி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சொந்த வீடுகளை இழந்து, இடம் பெயர்ந்துள்ள இவர்கள் உண்ண உணவின்றியும், மருந்துகள் இன்றியும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சர்வாதிகாரி இட்லர் நடத்திய இனப்படுகொலையை விடவும் மோசமான இனப்படுகொலையை அதிபர் ராஜபக்சே நடத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் சபதத்தை துணிந்து நிறைவேற்றி கொண்டிருக்கிறார். மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறார். இத்தனை கொடுமைகளுக்கு பிறகும், இந்திய அரசு வாய்திறக்கவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இலங்கைத் தமிழர்களை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய தமிழக அரசும் அந்த கடமையை செய்யவில்லை என்று உலக தமிழர்களெல்லாம் வேதனையில் மூழ்கி நிற்கின்றனர். அவர்களது வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு தூங்கி கொண்டிருக்கவில்லை என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிடுகிறார். போரை நிறுத்த வேண்டும், அமைதி பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், அதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பிரதமருக்கு தந்திகளை அனுப்பி வைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது தான்.
ஆனால் இவை மட்டும் போதாது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகும், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையில் இப்போது போர் நடவடிக்கைகளும், போர்ப்படையினரின் தாக்குதல்களும் தீவிரமாகியிருப்பதும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாததும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு சட்டப்பேரவையும், தமிழக மக்களும் விரும்பிய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஒரு எதிரி நாட்டின் மீது படையெடுத்து சென்று தாக்குதல் நடத்துவதற்கு நிகரான தாக்குதலை இலங்கை போர்ப்படையினர் ஈழத்தமிழர்கள் மீது நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அந்த போர் கடுமையாகி கொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் எங்கோ ஒரு மூலையில் பொதுக்கூட்டம் நடத்தி நிலைமையை விளக்குவதாலும், தந்திகள் அனுப்பி கொண்டிருப்பதாலும் நாம் விரும்புகின்ற பயன் ஏற்படப்போவதில்லை. முதலமைச்சரும், அவரது தலைமையிலான தமிழக அரசும் நேரடியாக பிரதமருடனும், அயலுறவுத்துறை அமைச்சருடனும் தொடர்பு கொண்டு பேச வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு சிறிலங்க அரசை எச்சரிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்.
அங்கே நடைபெற்று கொண்டிருக்கும் மூர்க்கத்தனமான போர்படையினரின் தாக்குதலை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கும் படி இந்தியா எச்சரிப்புடன் கூற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இப்படி நீங்கள் எடுக்க போகும் முயற்சியின் விளைவாக இனி இலங்கை தீவில் துப்பாக்கி சத்தங்கள் கேட்க கூடாது. ஒரு குண்டு முழக்கம் கூட கேட்க கூடாது. போர் விமானங்கள் குண்டு மழை பொழியக்கூடாது.
பீரங்கிகள் முழங்க கூடாது. போர் முழக்கங்கள் கேட்க கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்தும் படி சிறிலங்க அதிபருக்கு நிர்ப்பந்தங்கள் என்று பிரதமரிடமும், அயலுறவுத்துறை அமைச்சரிடமும் முதலமைச்சர் நெருக்குதல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் முதலமைச்சர் நேரடியாக டெல்லிக்கு சென்று பிரதமரையும், அயலுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து முறையிட வேண்டும். அவசியம் என்று கருதினால் அனைத்து கட்சித்தலைவர்களையும் அழைத்து செல்ல வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத ஒற்றுமை இப்போது, தமிழக அரசியல் களத்தில் உருவாகியிருக்கிறது. இந்த நல்ல சூழ்நிலையை முதலமைச்சர் பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும். அமைதி பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள போர்ப்படையினருக்கு எந்த வித உதவியும் வழங்க கூடாது.
இரு நாடுகளுக்கு இடையே கடலில் கூட்டு ரோந்து என்பனவற்றில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒருமித்த கருத்துக்கு வந்திருக்கின்றன. இந்த ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி இலங்கை தீவில் தமிழர்கள் அனைத்து அதிகாரங்களையும் பெற்று அமைதியாக வாழ, வழிவகை காண முதலமைச்சர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான முயற்சியை முதலமைச்சர் தாமதம் இன்றி மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.