"
ஜெயலலிதாவிடம் போய் மரியாதையையும், முறையையும், நாகரிகத்தையும் எதிர்பார்ப்பது தவறு. இந்தியப் பிரதமராக இருந்தால் என்ன, குடியரசு தலைவராக இருந்தால் என்ன ஜெயலலிதாவிற்கு அவர்கள் எல்லாம் சர்வ சாதாரணம்" என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜெயலலிதா அறிக்கையில் இந்தியப் பிரதமரைப் பற்றி "அமெரிக்காவின் தாசானுதாசர்'' என்றும், "அவருடைய எஜமானிய நாட்டின் அதிபரிடம் இருந்து ஏதும் கற்றதாகத் தெரியவில்லை'' என்றும், "கனவு உலகில் வாழும் மனிதர்'' என்றும் மரியாதைக் குறைவாக விமர்சனம் செய்திருப்பது முறைதானா? நாகரிகம்தானா?
ஜெயலலிதாவிடம் போய் மரியாதையையும், முறையையும், நாகரிகத்தையும் எதிர்பார்ப்பது தவறு. இந்தியப் பிரதமராக இருந்தால் என்ன, குடியரசு தலைவராக இருந்தால் என்ன ஜெயலலிதாவிற்கு அவர்கள் எல்லாம் சர்வ சாதாரணம். இவர் நினைத்துக் கொண்டால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவத்தினால் கைது செய்ய முடியாவிட்டால், இந்திய ராணுவம் அவர்களுக்கு உதவியாக இலங்கைக்குச் சென்று கைது செய்து தமிழ் நாட்டிற்கு அழைத்து வரவேண்டுமென்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவார். இல்லாவிட்டால் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி கொடுக்கலாமா? என்பார்.
இலங்கைப் பிரதமரை இங்கு அழைத்து வந்து, இந்தியப் பிரதமர் கண்டனம் தெரிவித்திட வேண்டும் என்பார். நினைத்தால் இலங்கைத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கருணாநிதி எதுவுமே செய்யவில்லை, அதற்கான ஆதாரம் எதுவுமே இல்லை என்று இந்து நாளிதழுக்குப் பேட்டி கொடுப்பார்.
பிறகு கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக இருக்கிறார், அவருடைய ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று டெல்லிக்கு காவடி எடுப்பார். சித்தம் போக்கு, சிவன் போக்கு என்பார்களே, அப்படித்தான்!
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நீங்கள் எதையும் செய்யவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?
ஜெயலலிதா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கை விடுகிறார். மதுரையில் பரிதிமாற் கலைஞர் நினைவகம் கவனிக்கப்படவில்லை என்றார். செய்தியாளர்களை அழைத்துச் சென்று காட்டப்பட்டது. விளக்கமான பதிலும் தரப்பட்டது. அதற்குப் பிறகு ஜெயலலிதா அதைப் பற்றி வாயே திறக்கவில்லை. மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணி நியமனம் பற்றி ஊழல் என்றெல்லாம் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.
நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் அந்தத் தேர்வு முறையாக நடைபெற்றது என்று விளக்கம் தரப்பட்டது. அதற்குப் பிறகு ஜெயலலிதா காணாமல் போய் விட்டார். அரிசி கடத்தல் பற்றி அமைச்சர் பேசிவிட்டார் என்று ஒரு நாள் அறிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் ஆதாரத்தோடு பதில் கொடுத்த பிறகு அம்மையார் "அம்போ'' வென்று அந்தப் பிரச்சினையையும் அத்தோடு விட்டுவிட்டார்.
கிராமம் கிராமமாகச் சென்று தொண்டர்களை தூண்டி விட்டு, நீங்கள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துங்கள், நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையிலேதான் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கழக அரசு எதையும் செய்யவில்லை என்று அறிக்கை விடுத்துள்ளார்.
விலைவாசியைக் குறைக்கும் நடவடிக்கைகள்தான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதும், மானிய விலையில் ரூ.50க்கு பத்து மளிகைச் சாமான்கள் கொடுப்பதும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் போன்றவற்றை வழங்குவதும் என்பதைப் புரிந்து கொள்வது அம்மையாருக்கு கஷ்டம்தான்.
தி.மு.க. ஆட்சியை விமர்சித்த தா. பாண்டியன், ஆர். நல்லகண்ணு, ஏ.எம். கோபு மீது கருணாநிதி கடும் தாக்குதல் என்று இன்றைய "ஜனசக்தி''யில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறார்களே?
அந்தத் தலைவர்கள் எல்லாம் என்னைத் தாக்கிப் பேசியதற்கு நான் மிகுந்த மரியாதையுடன் விளக்கம் தான் அளித்திருக்கிறேனே தவிர - நான் தாக்கிப் பேசவில்லை என்பதை அதனைப் படிப்பவர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் கருணாநிதி கடும் தாக்குதல் என்று "ஜனசக்தி'' தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. "தி.மு.க. அரசு தூங்கிக் கொண்டிருக்கின்றது'' என்று நல்லகண்ணு பேசியது தாக்குதலா? "நாங்கள் இப்போதும் தூங்கவில்லை, எப்போதும் தூங்க மாட்டோம்'' என்று பதிலளிப்பது தாக்குதலா?
"தேசப்பற்று மிக்க தலைவர்களை மதித்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் எங்கே? இப்போதுள்ள முதல்வர் எங்கே?' என்று கேள்விக்கணை தொடுத்த பாண்டியன் பேச்சு தாக்குதலா? நாங்கள் எந்தெந்த தேசப்பற்றுமிக்க தலைவர்களை மதித்தோம் என்று நான் பட்டியல் தந்திருப்பது தாக்குகின்ற காரியமா? "கருணாநிதி ஆட்சியிலே சிறை சென்றோம்'' என்று ஏ.எம். கோபு கூறியது தாக்குதலா? "பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட சிலருக்கு வீடு இல்லை என்று கேள்வியுற்று வருந்தி உடனடியாகக் கிடைக்கச் செய்தேன்'' என்று பதில் கூறியது தாக்குதலா? தேர்தலில் கூட்டணி வேறு, உறவு வேறு - ஆனால் தமிழர்கள் நாம்.
ஒருவருக்கொருவர் மீண்டும் சந்தித்துக் கொள்ள வேண்டியவர்கள் நாம். மனச்சாட்சியோடு கூறட்டும். எது தாக்குதல் என்று!
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஐ.நா.சபையில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதை நீங்கள் எடுத்துச் சொன்னவுடன், அதற்கு அவர் அளித்த அநாகரிகமான பதிலை வேறு எந்த ஏடும் வெளியிடாத நிலையிலே ஒரேயொரு ஏடு மட்டும் அதனை வெளியிட்டிருக்கிறதே?
"துரோகி''யின் பதில் மற்றொரு "துரோகி'' ஏட்டிலே வெளிவருவது தானே பொருத்தமாக இருக்கும். பண்ருட்டி ராமச்சந்திரன் எத்தகைய துரோகி என்பதை ஏ.கோவிந்தசாமி மரணப் படுக்கையில் கழக முன்னணித் தலைவர்களிடம் கூறியதைப் பற்றி பல முறை சொல்லியிருக்கிறேன். அவர் அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்த போது, செய்த மற்றொரு அநாகரிக செயலுக்கான உதாரணம் - கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழா நடைபெற்ற போது, அந்தச் சிலைக்குக் கீழே நின்று அண்ணா, நான், எஸ்.எஸ். வாசன், திலீப் குமார், ஏ.எல். சீனிவாசன், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அது அனைத்து ஏடுகளிலும் அப்போது வெளிவந்தது.
பிறகு சில ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை அமைப்பாளராகக் கொண்டு ஒரு மலர் தயாரிக்கப்பட்டபோது, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவிலே எடுக்கப்பட்ட புகைப்படத்தை அந்த மலரிலே வெளியிட்டார்கள்.
அப்போது அந்தப் புகைப்படத்திலே இருந்த என்னுடைய உருவத்தை மட்டும் மிகுந்த சிரமத்தோடு கத்தரிக்கோலால் வெட்டி விட்டு, மற்றவர்களின் புகைப்படத்தை ஒட்டி அந்த மலரிலே வெளியிடச்செய்த யோக்கிய சிகாமணிதான் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அவர் செய்த இந்தத் தில்லுமுல்லுவும் அப்போதே ஏடுகளில் வெளிவந்து, அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரே இவரை அழைத்து கடிந்து கொண்டதும் உண்டு. அவரது நண்பர்களே அவரை "குடிலன்'' என்றும், "சகுனி'' என்றும், "ஆந்திராவின் பாஸ்கர ரெட்டி'' என்றும் தான் அழைப்பார்கள். "ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது'' என்று சொல்வார்களே, அதைப்போல இவர் எங்கே சென்றாலும் அந்தக் கதிதான் என்றும் அவர்களே கூறுவார்கள்.
ஐ.நா.வில் அவர் பேசியதை நான் ஏதோ தவறாக வெளியிட்டு விட்டேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய பேச்சு 22-10-1983 தேதிய "தினமணி'' பக்கம் 4இல் வெளிவந்திருப்பதை அவரே எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.