இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு லட்சக்கணக்கில் தந்தி அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடைவிடாது நடைபெறும் சிங்கள ராணுவத்தாக்குதல்களிலிருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தாரை பாதுகாத்திட அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில் இது வரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளையெல்லாம் இந்திய அரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல், இந்த இனவெறி படுகொலை தொடர மேலும் மேலும் இடம் கொடுத்து விடாத அளவிற்கு வழி காண வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததும் அபாய அறிவிப்பு போன்றதுமான இந்த வேண்டுகோளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
தந்தி வாசகமான 'இலங்கை ராணுவத்தாக்குதல்-தமிழ் இனப்படுகொலை-தடுத்து நிறுத்திட இந்திய அரசு தலையிடுமாறு வேண்டுகோள்' என்று குறிப்பிட்டு, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு லட்சக்கணக்கில் தந்திகள் அனுப்புங்கள்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.