இட ஒதுக்கீடு சலுகை என்பது சமூக ரீதியில் வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியில் வழங்கப்படக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலைவாய்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு சலுகையைப் பெற்றிட இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ.4.50 லட்சமாக உயர்த்திட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இடஒதுக்கீடு சலுகை என்பது சமூக ரீதியில் வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதார ரீதியில் வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது.
எனவே, தற்காலிக ஏற்பாடாக வருமான உச்சவரம்பை உயர்த்தியுள்ளதை வரவேற்கின்ற அதே நேரத்தில் அடுத்தகட்டமாக வருமான உச்சவரம்பை முற்றிலுமாக நீக்கிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வற்புறுத்துகிறேன். இதற்காக தொடர்ந்து நாங்கள் போராடவும் தயங்கமாட்டோம்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு முதல்படியாக மிகக் குறைந்த அளவிலான இடங்களே ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை இல்லை என பெரும்பாலானவர்களை ஒதுக்கி வைத்துவிட்டதால், இந்த குறைந்த அளவிலான இடங்களைக் கூட நிரப்புவதற்கு தேவையான அளவுக்கு போட்டியாளர்கள் கிடைக்கவில்லை என்று சொல்லி 400-க்கும் மேற்பட்ட இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற இருக்கும் ஆபத்தை மத்திய அரசு இப்போது மேற்கொண்டுள்ள இந்த முடிவு தடுத்து நிறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், இதுவே நிரந்தர பரிகாரமாக இருந்துவிட முடியாது. இனி அடுத்து வரும் ஆண்டுகளில் 27 விழுக்காடு அளவிற்கான இடங்களை முழுமையாக நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, தேவையான அளவுக்கு போட்டியாளர்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக பெரும்பாலான இடங்கள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படும் ஆபத்து இருந்து கொண்டுதான் இருக்கும்.
எனவே, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு கொல்லைப்புறமாக வர இருக்கும் ஆபத்தை நிரந்தரமாக தடுக்க வேண்டுமானால், பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோர் என்ற தடையை முற்றிலுமாக தகர்த்தெறிய வேண்டும். வருமான வரம்பு இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் சலுகையை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் செயல்படுத்த வேண்டும்.
இடஒதுக்கீட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் தமிழகத்திலிருந்து இதற்கான முயற்சி தொடங்கப்பட வேண்டும். சமூக நீதியில் நம்பிக்கையுடைய அனைத்து அரசியல் இயக்கங்களும் இதற்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.