பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டத்தால், பாதிக்கப்பட்டுள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில், மத்திய அரசு பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றைக் கொண்டு புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களுக்கு அருகில் இருந்து சுவாசிப்பவர்களின் உடல் நலமும் பாதிக்கப்படும் என்பதைக் கருதியும், சிகரெட் போன்ற பொருட்களின் மீதான வரி விதிப்புகளால் அரசுக்கு கிடைத்து வரும் கணிசமான அளவு வருவாய் குறைய வாய்ப்பு இருந்தும், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பது அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஆனால், இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பு, அதனால் ஏற்படும் பாதகங்களுக்கு தீர்வாக ஏற்றுமதியை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.
இந்த சட்டம் காரணமாக, புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை குறைவதால், ஏழைகளின் சிகரெட் எனப்படும் பீடி உற்பத்தியை நம்பி லட்சக்கணக்கான பீடி சுற்றும் தொழிலாளர்கள் அவர்களுள் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வீட்டில் இருந்தபடியே பெண்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு வருவாய் ஈட்டிக் கொண்டிருக்கும் பீடி சுற்றும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மட்டும் சுமார் 7 லட்சம் பேர் இந்த சட்டத்தால் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே பீடி உற்பத்தித் தொழில் நலிவடைந்து பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், இந்த சட்டம் மேலும் அவர்களுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ளது.
எனவே, இந்த சட்டத்தின் மூலம் பாதிப்படைந்துள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடாக, பீடி சுற்றும் தொழிலாளர்களாக பதிவு செய்திருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் கிடைக்க செய்வதோடு, அதுவரைக்கும் அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அவர்களது வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில், உதவித்தொகை வழங்கவும் அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.