திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மின்வெட்டைத் தொடர்ந்து அமல்படுத்தி வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 6ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகரில் தற்போது நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக, பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகின்றது. மேலும், மின்வெட்டு காரணமாக இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால் வழிப்பறி கொள்ளைகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதன் விளைவாக பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதே போல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் அறுவை சிகிச்சைகள் மற்றும் சோதனைகளை நடத்த முடியாமல் அவதியுறுகின்றனர். மேலும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் ஜெனரேட்டர்களைக்கூட பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக, மாணவ-மாணவியர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுவதுடன், மக்களின் தூக்கம் கெட்டுப் போவதால், அவர்கள் மறுநாள் பணிக்குச் சென்று சுறுசுறுப்புடன் தங்களது வேலையைப் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இது மட்டும் அல்லாமல், மின்சார வெட்டு காரணமாக சிறு மற்றும் குறுந்தொழில்கள் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செயற்கை வைரக் கற்களுக்கு பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து தங்களது குடும்பத்தை வழிநடத்திச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
மொத்தத்தில் மக்களுக்கு எந்த விதத்திலும் நிம்மதி இல்லை. மாறாக, இன்னல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மாநகராட்சி நிர்வாகமும் மக்களுடைய அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி வைக்காமல் மெத்தனப் போக்கோடு இருந்து வருகிறது. இதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மின்வெட்டைத் தொடர்ந்து அமல்படுத்தி வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும், அ.இ.அ.தி.மு.க. திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் வரும் 6ஆம் தேதி காலை 10 மணி அளவில், திருச்சி மாநகர் சந்திப்பு காதி கிராப்ட் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.