''
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை பெற அவர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியதன் மூலம், பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக நிறைவேற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்றுவதற்காக முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான அன்றைய மத்திய அரசு முயற்சி எடுத்து 28 விழுக்காடு இடஒதுக்கீட்டை அறிவித்தது. ஆனால் பின்தங்கிய மக்களுக்கு எதிராக செயல்படும் மற்ற ஆதிக்க சக்திகள் இட ஒதுக்கீடு திட்டத்தை நிறைவேற்ற இயலாமல் நாடெங்கும் கலவரம் மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி தடுத்து விட்டதை நாடறியும்.
1991-96 ஆம் ஆண்டு பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 93ஆம் ஆண்டு நான் மத்திய நலத்துறை அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் மண்டல் கமிஷன் அறிவிப்பின்படி 27 விழுக்காடு இடஒதுக்கீடு கொள்கையை பின்தங்கிய மக்களுக்காக நிறைவேற்ற முயற்சிகள் எடுத்ததன் வாயிலாக, எந்தவித குழப்பங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடம் தராமல் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசி ஒரு சுமூகமான தீர்வை மத்திய காங்கிரஸ் அரசு கண்டு பின்தங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு ஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றினோம்.
பின்தங்கிய மக்களில் 'கிரீமிலேயர்' என்ற வருவாயில் உயர்பிரிவினர் தவிர்த்து எஞ்சியோருக்கு அந்த ஆணையை நிறைவேற்றக்கூடிய நிலையில் உயர் பிரிவினருக்கு முதலில் ஒரு லட்சம் வருவாய் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரூ.2 லட்சத்துக்கு உயர்த்தப்பட்டது.
சோனியாகாந்தி வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த மத்திய அரசு கல்வியிலும், பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு வாய்ப்புகள் வழங்க வேண்டிய தனிச்சட்டம் இயற்றி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையை உறுதிப்படுத்தியது.
மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவும், பின்தங்கிய மக்கள் வருமான வரம்பு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றநிலையில் இல்லாத காரணத்தாலும் இடஒதுக்கீடு கொள்கையின் முழுமையான பயனை பின் தங்கிய மக்கள் பெற இயலாத நிலை ஏற்பட்டது.
இந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை கூடி ரூ.2 1/2 லட்சமாக இருந்த வருமான வரம்பை ரூ.4 1/2 லட்சமாக உயர்த்தி அறிவித்து பின்தங்கிய மக்கள் முன்னேற்றத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தன்னுடைய கடமையை நிறைவேற்றி பெருமை பெற்றுள்ளது. இதன் மூலம் பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீடு கொள்கை முழுமையாக நிறைவேற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்று தங்கபாலு கூறியுள்ளார்.