Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு மத்திய அரசும் கூ‌ட்டா‌ளி: ஜெயலலிதா!

ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு மத்திய அரசும் கூ‌ட்டா‌ளி: ஜெயலலிதா!
, சனி, 4 அக்டோபர் 2008 (12:53 IST)
ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் படுகொலைக்கு‌ம், கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கிறது எ‌ன்று கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள அ.இ.‌அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா, ஆயுதங்களையும், ரேடார் கருவிகளையும், பயிற்சியையும் இலங்கை ராணுவத்திற்கு வழங்கியதன் மூலம், இந்த கோர ‌நிக‌ழ்வுக‌ளி‌ன் முழு பங்குதாரராக இந்திய அரசு செயல்பட்டிருக்கிறது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌‌யி‌ல், ''இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அண்மையில் அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாக வந்துள்ள பத்திரிகை- தொலைக்காட்சி செய்தியைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். தொழில்நுட்ப ரீதியாகவும், போர்க்கள ஆற்றலிலும் வல்லமை பெற்றிருப்பதால், இந்திய ராணுவம் இத்தகைய பயிற்சியை இலங்கை ராணுவத்திற்கு அளித்திருப்பதும், இந்திய அரசின் முழு ஆதரவோடும், ஒப்புதலோடும் இந்தப் பயிற்சி நடைபெற்றிருப்பதும் தெளிவாகிறது.

இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுதங்களை வழங்குகிறது என்றும், மிக நவீன ராணுவ ரேடார் கருவிகளை வழங்கி, இந்திய ராணுவம் அந்த ரேடார் கருவிகளை தந்ததென்றும் அண்மையில் பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இத்தகைய செய்திகளை இந்திய அரசு மறுக்கவில்லை. பிரதமரின் மூத்த உதவியாளர்கள் சிலரும், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் இலங்கைக்குச் சென்று வந்தனர் என்ற செய்தியையும் பத்திரிகைகள் வெளியிட்டன. அதையும் இந்திய அரசு மறுக்கவில்லை.

இலங்கை ராணுவத்திற்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்ட செய்தியையும் ஊடகங்கள் திறம்பட கண்டு பிடித்து மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளன. ஒரு நாட்டு ராணுவம் மற்றொரு நாட்டுப்படையினருக்கு பயிற்சி அளிப்பது எங்குமே நடைபெறக் கூடியது தான். ஆனால், யாருக்கு எதிராக செயல்பட இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கிறது? என்பது தான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் ராணுவச் செயல்பாடுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகத்தான் அமைந்துள்ளன என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மீது மட்டும்தான் தாக்குதல் நடத்துகிறோம் என்று இலங்கை அரசு பறைசாற்றலாம். ஆனால், ஒவ்வொரு நாளும் தமிழர் பகுதிகளில் மடிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களைப் பற்றி வரும் செய்திகள், இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழப்போர் விடுதலைப்புலிகள் மட்டும் அல்ல, அப்பாவி தமிழ் மக்களும்தான் என்ற உண்மையை உலகுக்குச் சொல்லுகின்றனவே.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஆயுதங்களும், பயிற்சியும் பயன்படுத்தப்படுகின்றன என்பது தான் இந்தச் செய்திகள் அனைத்திலும் பொதிந்திருக்கும் உண்மை. இந்தக் கொடுமை போதாதென்று இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களையும் சுட்டுக் கொல்கிறது.

இந்திய அரசால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு பகுதியிலேயே இந்திய மீனவர் ஒருவரை இலங்கை அரசு சுட்டுக்கொன்றது என்று அண்மையில் செய்தி வந்துள்ளது. இந்தப் பிரச்சனையை இலங்கை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாக இந்திய அரசு எப்போதும் தெரிவிக்கிறதே தவிர, உருப்படியான நடவடிக்கை எதையும் இந்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இந்த வேதனையான உண்மையை என்னவென்று சொல்வது?

இத்தனைப் படுகொலைகளையும் இந்திய அரசு வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் புதுடெல்லியே மவுன சாட்சி என்பது மட்டும் அல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கிறது. ஆயுதங்களையும், ரேடார் கருவிகளையும், பயிற்சியையும் இலங்கை ராணுவத்திற்கு வழங்கியதன் மூலம், இந்த கோரச் சம்பவங்களின் முழு பங்குதாரராக இந்திய அரசு செயல்பட்டிருக்கிறது.

மத்திய அமைச்சர்கள் என தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் 10 பேரைக் கொண்ட இந்திய அரசு தான் இத்தகைய பழி பாவத்தில் பங்கு பெற்றி ருக்கிறது. தி.மு.க.வை மிக இன்றியமையாத உறுப்பினராகக் கொண்ட மத்திய கூட்டணி அரசு தான் இந்தக் கொடுமைகளில் கூட்டாளியாகி இருக்கிறது. கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று தி.மு.க. அறிவித்தால் மத்திய ஆட்சியே கவிழ்ந்து விடும். ஆனால், "தமிழினத் தலைவர்'' என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பேச்சு, மூச்சற்றுப் போவார்; வாய்மூடிக் கிடப்பார்.

தங்களைப் பற்றிய அக்கறை கருணாநிதிக்கு இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். வரலாறு கண்டிராத விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அவர் எதையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட கருணாநிதி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் தாசானு தாசராக உருமாறியுள்ள மன்மோகன்சிங், தன் எஜமானிய நாட்டின் அதிபரிடம் இருந்து ஏதும் கற்றதாகத் தெரியவில்லை. நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுர கட்டடங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய ஒரு தாக்குதல் காரணமாக, ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடே அமெரிக்காவால் சின்னாபின்னமாக்கப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

அமெரிக்க தேசத்திடம் இருந்து மன்மோகன்சிங் பாடம் எதையும் படித்ததாகத் தெரியவில்லை. இலங்கை மீது படையெடுத்துச் செல்லுங்கள் என்று நாம் கூறவில்லை. இலங்கை பிரதமரை அழைத்து தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தையாவது தெரிவிக்கலாமே?

சர்ச்சைக்குரிய அணு சக்தி ஒப்பந்தம் தான் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கின் வாழ்க்கையின் மையப்புள்ளியாகிவிட்டது. இந்தியாவை பாதிக்கும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு மன்மோகன்சிங் கண்ட ஒரே மருந்து அணு சக்தி ஒப்பந்தம் தான்.

பயங்கரவாத தொடர் குண்டுவெடிப்புகள், விண்ணை முட்டும் விலைவாசி, பங்குச் சந்தை வீழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும், அதற்கு அணு சக்தி ஒப்பந்தம் ஒன்றே தீர்வு என நினைக்கின்ற மனிதரைப் பற்றி என்ன சொல்ல? இப்படி ஒரு கனவு உலகில் வாழும் மனிதர் கண்ணீரில் மிதக்கும் தமிழ் மக்களுக்காக கடமையாற்றுவார் என நினைப்பது முட்டாள் தனம்.

இந்த முகமூடி மனிதர்களின் உண்மை நிலை அறிந்து மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் வந்துவிட்டது. தங்களின் வாக்குகளால் பதவி சுகத்தை அனுபவிக்கும் இந்தப் போலி மனிதர்களை கீழிறக்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும். மக்கள் சக்தி என்னும் மகத்தான ஆற்றல் மீது அ.இ.அ.த‌ி.மு.க. முழு நம்பிக்கை வைத்துள்ளது. மத்திய அரசை அகற்றும் முயற்சியில் அ.இ.அ.‌தி.மு.க. அயராது பாடுபடும். என் நேரம், நினைவு அனைத்தையும் இந்த முயற்சிக்கே அர்ப்பணிக்கிறேன்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil