உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதில் ஆண்டு வருமானம் என்ற பொருளாதார தடையை உச்ச நீதிமன்றம் விதித்திருந்தது.
அதன்படி ஆண்டு வருமானம் ரூ.2 1/2 லட்சம் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் இந்த தொகையை ரூ.4 1/2 லட்சமாக பரிந்துரைத்து மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங், முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வீரமணி கூறியுள்ளார்.