காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட காவலர்கள் ரூ.3 லட்சம் வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் (22) மீது, பல திருட்டு வழக்குகள் இருந்தன. நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் திருடியதாக 1995ல் முருகேசன் கைது செய்யப்பட்டார்.
கடற்கரையில் புதைத்து வைத்த நகைகள், துப்பாக்கியை பறிமுதல் செய்ய முருகேசனை பெசன்ட் நகர் கடற்கரைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது, தப்பி ஓட முயற்சி செய்த முருகேசனை, காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து விசாரித்த நீதிபதி பரிந்துரை படி, முருகேசன் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கவும் அதை தவறு செய்த காவலர்களிடம் வசூலிக்கவும் அரசு உத்தரவிட்டது.
நஷ்டஈடு தொகையை அதிகரிக்கக் கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் முருகேசன் குடும்பத்தினர் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், நஷ்டஈடு தொகையை ரூ.3 லட்சமாக அதிகரித்து உத்தரவிட்டது.